வடக்கு – கிழக்கு மக்களை “விசித்திரமானவர்கள்” எனக் காட்டும் குடும்ப அட்டை நடைமுறை

இலங்கையின் தென்பகுதியில் வாழும் மக்களுக்குப் பரிச்சயமில்லாத, ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு பாரிய சுமையாக மாறியுள்ள “குடும்ப அட்டை” நடைமுறை எந்தவொரு தெளிவான சட்ட அடிப்படையுமின்றி தன்னிச்சையாகச் செயற்படுத்தப்பட்டு வருகின்றமை ஐபென் நிறுவனம் மேற்கொண்ட விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

யுத்தக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நடைமுறை, முரண்பாடுகள் முடிவுக்கு வந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் இன்னும் கட்டாயமாக்கப்பட்டு வருவது, அம்மக்களுக்கு எதிரான ஒரு பாகுபாடு எனப் பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.

கிராம அலுவலர்களிடம் இருந்து சேவைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் குடும்ப அட்டை கட்டாயமாகக் கேட்கப்படுவதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

“அரசின் உதவித்திட்டங்கள், சமுர்த்தி, வீட்டுத் திட்டங்கள் மற்றும் கிராம அலுவலர் சான்றிதழ்களைப் பெற குடும்ப அட்டை அவசியம்.

தேசிய அடையாள அட்டை, வாக்காளர் அட்டை போலவே இதையும் கொண்டு செல்ல வேண்டும். பிறப்பு, இறப்பு தகவல்களைப் புதுப்பிக்க ஆண்டுதோறும் 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது” என யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பத்மராஜா சசிகாந்த் மற்றும் சுமதி தங்கராசா ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.

முன்பு மன்னார் நகரைச் சூழவுள்ள பகுதிகளுக்கு மட்டுமே கட்டாயமாக இருந்த இந்த நடைமுறை, இந்த ஆண்டு முதல் மாவட்டம் முழுவதற்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக ஜசோதரன் கலாதரன் என்பவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் குடும்ப அட்டை யாருடைய உத்தரவின் பேரில், எந்தச் சட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படுகிறது எனத் தேடி, 2016 ஆம் ஆண்டின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஐபென் நிறுவனம் மேற்கொண்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன.

“குடும்ப அட்டை என்றால் என்னவென்றே எங்களுக்குத் தெரியாது” எனப் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு கைவிரித்துள்ளது. அத்துடன் எந்தவொரு அரச சேவைக்கும் இத்தகைய ஆவணம் கட்டாயமில்லை என்றும் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும் கிளிநொச்சி, வவுனியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டச் செயலகங்கள் இது கட்டாயமில்லை. நிர்வாக வசதிக்கான ஆவணம் மட்டுமே எனக் கூறுகின்றன. ஆனால், முல்லைத்தீவு மாவட்டத்தில் இது ஒவ்வொரு குடும்பத்திற்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது பொது நிர்வாக அமைச்சின் திட்டம் அல்ல, மாவட்ட மட்டத்திலான முடிவு என முல்லைத்தீவு மேலதிக மாவட்டச் செயலாளர் ஒப்புக்கொண்டுள்ளார். அத்துடன், “வடக்கு முழுவதும் இது பயன்படுத்தப்படுகிறது, இல்லை என்று கூறுவது தவறு” என்றும் அவர் வாதாடியுள்ளார்.

ஆண்டுதோறும் இந்த அட்டைகளைப் புதுப்பிப்பதற்கோ அல்லது அச்சிடுவதற்கோ ஒரு குடும்பத்திடம் இருந்து 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. முல்லைத்தீவு மாவட்டக் கணக்கின் அடிப்படையில் மட்டும், இதன் மூலம் வருடத்திற்குச் சுமார் 2,372,750 ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

அமைச்சின் முறையான அனுமதி அல்லது சட்ட ரீதியான பின்னணி இல்லாமல் மாவட்ட மட்டங்களில் வசூலிக்கப்படும் இந்தப் பணம் எங்குச் செல்கிறது என்ற கேள்வி தற்போது எழுப்பப்பட்டுள்ளது.

இந்த விசாரணையின் மூலம், குடும்ப அட்டை என்பது முறையான சட்ட ரீதியான அதிகாரமின்றி, மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபட்ட வகையில் தன்னிச்சையாகச் செயற்படுத்தப்படும் ஒரு நடைமுறை என்பது உறுதியாகியுள்ளது.

மத்திய அரசின் பொது நிர்வாக அமைச்சுக்குத் தெரியாமல் மாகாண மட்டத்தில் இவ்வாறான கட்டாய நடைமுறைகள் எவ்வாறு சாத்தியமாகின்றன? சமத்துவமான அரச சேவைக்கான உரிமையை இது பாதிக்காதா? போன்ற கேள்விகளுக்குச் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் வெளிப்படையான பதில்களை வழங்க வேண்டும் எனச் சிவில் சமூகத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

Recommended For You

About the Author: admin