செனகல் அணியை 3–1 என வீழ்த்தி பிரான்ஸ் அபார வெற்றி!
கால்பந்து உலகக் கிண்ண தொடரின் I குழுவிற்கு இடையிலான இன்றைய (17) போட்டியில், பிரான்ஸ் அணி 3–1 என்ற கோல் கணக்கில் செனகல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
2002 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் செனகலிடம் பிரான்ஸ் அதிர்ச்சித் தோல்வி அடைந்த வரலாற்றுப் பின்னணியுடன் இந்த ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கடுமையான தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் எந்தவொரு கோலும் அடிக்கப்படவில்லை.
ஆட்டத்தின் 66 வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்பே (Kylian Mbappé) முதல் கோலை அடித்து அணியை முன்னிலை பெறச் செய்தார்.
இதனை தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸ் அணிக்கு மாற்று வீரராக களம் புகுந்த பிரட்லி பார்கோலா (Bradley Barcola) 82 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அணியின் முன்னிலையை 2-0 என உயர்த்தினார்.
ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் (Stoppage time) செனகல் அணியின் இளம் மாற்று வீரர் இப்ராஹிம் எம்பாயே (Ibrahim Mbaye) ஒரு கோல் அடித்து பிரான்ஸ் அணிக்கு அதிர்ச்சியளித்தார்.
இதனால் ஆட்டம் 2-1 என மாறியது.
செனகல் கோல் அடித்த அடுத்த நிமிடமே, ஆட்டத்தின் கடைசி விநாடிகளில் எம்பாப்பே தனது இரண்டாவது கோலை அடித்து பிரான்ஸின் 3-1 என்ற அபார வெற்றியை உறுதி செய்தார்.

