இலங்கையில் பரதநாட்டியத்திற்கு புதிய உலக சாதனை; காலி முகத்திடலில் 5,000 கலைஞர்கள் பங்கேற்பு
கொழும்பு: இலங்கையின் கலை மற்றும் பண்பாட்டு வரலாற்றில் புதிய அத்தியாயம் படைக்கும் வகையில், கொழும்பு காலி முகத்திடலில் (Galle Face Green) இன்று காலை நடைபெற்ற மாபெரும் பரதநாட்டிய நிகழ்வு புதிய உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது.
உலகின் மிகப்பெரிய பரதநாட்டியப் பயிற்சி என்ற அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் சுமார் 5,000 கலைஞர்கள் ஒரே நேரத்தில் பங்கேற்று பரதநாட்டிய அசைவுகளை ஒருங்கிணைந்து நிகழ்த்தினர். இந்த முயற்சி கின்னஸ் உலக சாதனைப் பதிவிற்காக முன்வைக்கப்பட்டிருந்தது.
இன்று காலை 6 மணிக்கு ஆரம்பமான நிகழ்வில், ஆயிரக்கணக்கான கலைஞர்கள் ஒரே மேடையில் இணைந்து கலைநிகழ்வை அரங்கேற்றியமை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
நிகழ்வை நேரில் பார்வையிட்ட கின்னஸ் உலக சாதனை நிறுவனத்தின் நடுவரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து (UK) வருகை தந்திருந்த ரிஷி நாத், சாதனைக்கான அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்த பின்னர், புதிய உலக சாதனை அதிகாரப்பூர்வமாகப் பதிவாகியுள்ளதாக அறிவித்தார்.
அப்போது உரையாற்றிய அவர், “நீங்கள் அனைவரும் இப்போது அதிகாரப்பூர்வமாக வியக்கத்தக்க சாதனையாளர்கள்” எனப் பாராட்டியதுடன், உலக சாதனைக்கான சான்றிதழை நிகழ்வின் பிரதம அதிதியான பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிடம் வழங்கினார்.
சான்றிதழைப் பெற்றுக்கொண்ட பிரதி அமைச்சர், தமிழ் பாரம்பரியக் கலையான பரதநாட்டியத்தின் பெருமையை உலக அரங்கில் நிலைநாட்டிய இந்த தருணம், ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் பெருமை சேர்க்கும் சாதனையாக அமைந்துள்ளதாக தெரிவித்தார்.

