“அமெரிக்க சட்டத்தால் பிரான்ஸ் அணியிலிருந்து பிரிக்கப்படும் இளம் வீரர்! வினோத தடை!”,
2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்க அமெரிக்கா வந்துள்ள பிரான்ஸ் அணியின் 20 வயது இளம் நட்சத்திர வீரர் வாரன் ஜைர்-எமரி (Warren Zaire-Emery), அங்குள்ள ஒரு கடுமையான உள்ளூர் சட்டத்தால் வினோதமான தடை ஒன்றை எதிர்கொண்டுள்ளார்.
இதனால் அவர் ஹோட்டலில் தனது சக வீரர்களுடன் சில இடங்களுக்குச் செல்ல முடியாத இக்கட்டான சூழ்நிலை உருவாகியுள்ளது.
கடந்த உலகக் கோப்பை தொடர்களில் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் தங்கிய பிரான்ஸ் அணி, இந்த முறை அமெரிக்காவின் பாஸ்டன் (Boston) நகரின் மையப்பகுதியில் உள்ள சொகுசான ‘ஃபோர் சீசன்ஸ்’ (Four Seasons) ஹோட்டலில் தங்கியுள்ளது.
இந்த ஹோட்டலில் உள்ள புகழ்பெற்ற ‘Aujourd’hui Bar’ பகுதிக்குள் நுழைய ஜைர்-எமரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாசசூசெட்ஸ் (Massachusetts) மாநில சட்டப்படி, உணவு பரிமாறாத வெறும் மதுபான பார்களுக்குள் 21 வயதுக்குட்பட்டவர்கள் பெரியவர்களுடன் வந்தாலும் அல்லது மது அருந்தாவிட்டாலும் கூட உள்ளே நுழைய அனுமதி கிடையாது.
பிஎஸ்ஜி (PSG) கிளப் வீரரான ஜைர்-எமரிக்கு இன்னும் 21 வயது நிறைவடையாததால் (வரும் மார்ச் மாதமே 21 வயதாகும்), பிரான்ஸ் அணி வீரர்கள் அனைவரும் அந்த பாரில் கூடிப் பேசும் போது அவர் மட்டும் தனியாகப் பிரிக்கப்படும் ஒரு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது.
அவரது சக வீரரான டெசிரே டூயே (Desire Doue) கடந்த ஜூன் 3 அன்று 21 வயதை எட்டியதால் அவருக்கு இந்த தடை இல்லை.
உலகக் கோப்பை தொடரில் மிகவும் பலம் வாய்ந்த அணியாகக் கருதப்படும் பிரான்ஸ் அணி குரூப் I பிரிவில் இடம் பெற்றுள்ளது.
ஜூன் 16 (செவ்வாய்):தனது முதல் ஆட்டத்தில் செனகல் அணியை நியூ ஜெர்சியில் எதிர்கொள்கிறது.
ஜூன் 22: பிலடெல்பியாவில் ஈராக் அணியுடன் மோதுகிறது.
ஜூன் 26: பாஸ்டன் நகரில் நார்வே அணியை எதிர்கொள்கிறது.
பிரான்ஸ் அணியின் பயிற்சியாளர் டிடியர் டெஷாம்ப்ஸ் (Didier Deschamps) வழிநடத்தும் கடைசி உலகக் கோப்பை தொடர் இது என்பதால், நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே (Kylian Mbappe) இந்த முறை கோப்பையை வென்று அவருக்குப் பெருமையுடன் விடை கொடுக்கக் காத்திருக்கிறார்.

