பாரிஸில் 35°C, ஆக்செரில் 36°C: பிரான்சை அடுத்த வாரம் தாக்கவுள்ள கடுமையான வெப்ப அலை!

கடந்த சில நாட்களாகக் குளிர்ந்த காற்றும் மழையுமாக இருந்த பிரான்சின் வானிலை, அடுத்த வாரம் மீண்டும் தலைகீழாக மாறப்போகிறது. ஆப்பிரிக்காவிலிருந்து வரும் வெப்பக் காற்றின் காரணமாக, அடுத்த சில நாட்களில் வெப்பநிலை சுமார் 10°C வரை உயர்ந்து, நாட்டின் பல பகுதிகளில் 36°C வரை சுட்டெரிக்கவுள்ளது.

கோடைகாலம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவதற்கு முன்பே வரும் இரண்டாவது பெரிய வெப்ப அலை (Vague de chaleur) இதுவாகும்.

திங்கள் மற்றும் செவ்வாய் (ஜூன் 15 – 16): படிப்படியான வெப்ப உயர்வு

திங்கட்கிழமை: நாடு முழுவதும் நல்ல வெயில் அடிக்கும். தென்பகுதிகளான போர்டோ (Bordeaux) மற்றும் பெர்பிக்னான் (Perpignan) ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 32°C வெப்பம் பதிவாகும். மோண்ட்பெல்லியே மற்றும் துலூஸ் பகுதிகளில் 31°C-ம், லியோனில் 27°C-ம் இருக்கும். பாரிஸ் (25°C), ராம்ஸ் (22°C) மற்றும் லில் (20°C) ஆகிய வடக்குப் பகுதிகளில் வெப்பம் சற்று இதமாகவே இருக்கும்.

செவ்வாய்க்கிழமை: வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரிக்கும். நௌவெல்-அக்விடெய்ன் மற்றும் ஆக்சிதானி பகுதிகளில் 30°C வரையும், ஓவெர்ன்-ரோன்-ஆல்ப்ஸ் பகுதிகளில் 33°C வரையும் வெப்பம் உயரும். கேப் (Gap) பகுதியில் மட்டும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

புதன் மற்றும் வியாழன் (ஜூன் 17 – 18): முதல் உச்சக்கட்ட வெப்பம்

புதன்கிழமை: பிரான்ஸ் முழுவதும் வானம் தெளிவாகக் காணப்படும். பாரிஸில் வெப்பநிலை 31°C ஆக உயரும். ஸ்ட்ராஸ்பேர்க் மற்றும் நாந்த் பகுதிகளில் 30°C-ம், பௌர்ஜஸ் மற்றும் லிமோஜஸில் 32°C-ம், சலோன்-சுர்-சோனில் 33°C-ம் வெப்பம் பதிவாகும்.

வியாழக்கிழமை (முதல் உச்சம்): இந்த வாரத்தின் முதல் அதிகபட்ச வெப்பம் வியாழக்கிழமை பதிவாகும். ஆக்செர் (Auxerre) நகரில் வெப்பம் 35°C-ஐத் தொடும். பாரிஸ், நாந்த் , லியோன் ஆகிய நகரங்கள் 34°C வெப்பத்தில் தகிக்கும். போர்டோவில் 33°C-ம், துலூஸில் 32°C-ம் இருக்கும். மேலும், இரவு நேரங்களிலும் வெப்பம் குறையாமல் குறைந்தபட்சமாக 20°C வெப்பம் நீடிக்கும் என ‘வானிலை பிரான்ஸ்’ (Météo France) எச்சரித்துள்ளது.

வெள்ளி மற்றும் வார இறுதி (ஜூன் 19 – 21): இசைத் திருவிழாவில் தகிக்கும் வெயில்!
வெள்ளிக்கிழமை: வியாழக்கிழமையைப் போலவே கடுமையான வெப்பம் நீடிக்கும். ஆனால், வடக்குப் பகுதிகளில் மட்டும் வெப்பத்துடன் சேர்த்து மழையும் பெய்யக்கூடும்.

வார இறுதி (கோடையின் தொடக்கம்): ஜூன் 20 மற்றும் 21 ஆகிய திக திகளில் கோடைகாலம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது. இந்த நாட்களில் நாட்டின் பெரும்பகுதிகளில் வெப்பநிலை 30°C-ஐத் தாண்டும். பாரிஸில் வெப்பம் 35°C ஆக இருக்கும். வடக்குப் பகுதிகளில் மட்டும் கோடை மழையை எதிர்பார்க்கலாம்.

இசைத் திருவிழா (Fête de la musique – ஜூன் 21): இசைத் திருவிழா கொண்டாடப்படும் ஞாயிற்றுக்கிழமையன்று, இந்த வாரத்தின் புதிய உச்சக்கட்ட வெப்பம் பதிவாகும்.

ஆக்செர், லிமோஜஸ் மற்றும் சலோன்-சுர்-சோன் ஆகிய நகரங்களில் மக்கள் 36°C வெப்பத்தில் மூச்சுத்திணற நேரிடும். பாரிஸ், டூர்ஸ், விச்சி, லியோன் போன்ற முக்கிய நகரங்களிலும் வெப்பநிலை ஏறக்குறைய 36°C-ஐ நெருங்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடுமையான வெப்பம் நிலவ உள்ளதால், மக்கள் போதிய அளவு தண்ணீர் குடிக்கவும், வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களைக் பாதுகாத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்

Recommended For You

About the Author: admin