பிரான்சின் ‘ப்ளூவா’ (Blois) நகரத்திற்கு அருகிலுள்ள சுவேவ்ர் (Suèvres) பகுதியில், 40 வயதான 4 குழந்தைகளின் தாய் ஒருவர் நள்ளிரவில் அவரது கணவரால் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாகக் கொல்லப்பட்ட பெண்ணின் 50 வயது கணவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை நள்ளிரவில் கொடூரமான இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. நள்ளிரவு 12 மணியளவில் தம்பதியின் 16 வயது மூத்த மகள் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்புகொண்டு, “தனது தந்தை தாயைக் கத்தியால் சரமாரியாகக் குத்துவதாக” பதற்றத்துடன் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையில் 4 முதல் 16 வயதுக்குட்பட்ட 4 குழந்தைகளும் அச்சத்தில் தஞ்சம் அடைந்திருப்பதைக் கண்டனர்.
படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த தாயை மீட்டுத் தீவிர முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், அதிகாலை 1:30 மணியளவில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
செவிலியர் உதவியாளராகப் (Aide-soignante) பணியாற்றி வந்த அவரது உடலில், பல முக்கிய உறுப்புகளில் ஆழமான கத்திக்குத்துக் காயங்கள் இருந்ததாக ப்ளூவா அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கொலை தொடர்பாகப் பெண்ணின் 50 வயது கணவரை, அதிகாலை 3:45 மணியளவில் ப்ளூவா நகரில் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்படும்போது அவர் கடுமையான மதுபோதையில் இருந்துள்ளார். காவலில் வைக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவருக்கு நுரையீரல் பாதிப்பு (Pneumothorax) ஏற்பட்டதற்கான அறிகுறிகள் காணப்பட்டதால், அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், பலத்த போலீஸ் பாதுகாப்பில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்ட விசாரணையில், பிரிந்து செல்லும் முடிவிலும் அதன் தொடர்ச்சியான ‘கடும் சந்தேகமும் பொறாமையும்’ காரணமாகவே இந்தக் கொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளது. கொல்லப்பட்ட பெண், தனது குழந்தைகளுடன் புதிதாக ஒரு சமூகக் குடியிருப்பிற்கு (Logement social) குடிபெயரத் தயாராக இருந்துள்ளார்.
இவர் குடும்ப வன்முறையால் ஏற்கனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2025 நவம்பரில் நடந்த உடல்ரீதியான தாக்குதல் மற்றும் தொடர் மனரீதியான துன்புறுத்தல்கள் தொடர்பாக, கடந்த ஜனவரி 28 அன்று அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். குழந்தைகள் நல அமைப்பின் (Aide sociale à l’enfance) எச்சரிக்கையைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதத்திலிருந்தே இந்தக் குடும்பம் மீதான வன்முறை விசாரணை நிலுவையில் இருந்து வந்துள்ளது.
தாய் கொல்லப்பட்டுத் தந்தை கைதான நிலையில், நிராதரவான 4 குழந்தைகளும் தற்காலிகமாகக் குழந்தைகள் நல அமைப்பின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் ப்ளூவா மருத்துவமனையின் குழந்தைகள் நலப்பிரிவில் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கான தத்து வளர்ப்பு குடும்பத்தைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கணவர் மருத்துவமனையிலிருந்து திரும்பியதும் அவரிடம் திட்டமிட்ட கொலைக் குற்றச்சாட்டின் (Assassinat) கீழ் விரிவான விசாரணை தொடங்கப்படும் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர். பெண்ணின் உடற்கூறாய்வு வெள்ளிக்கிழமை மாலையில் நடைபெறவுள்ளது.
பிரான்சில் குடும்ப வன்முறையால் பெண்கள் கொல்லப்படும் சம்பவங்கள் (Féminicides) தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த அக்டோபர் மாதம் வெளியான அதிகாரப்பூர்வப் புள்ளிவிவரங்களின்படி, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இத்தகைய கொலைகள் 11% அதிகரித்துள்ளன; மொத்தம் 107 பெண்கள் தங்களது கணவர் அல்லது முன்னாள் கணவரால் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

