“சென்னையில் நள்ளிரவில் பயங்கரம்”.. கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார்.. துடிதுடித்து இறந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள்..!
பொன்னேரி அருகே நிகழ்ந்த பயங்கர கார் விபத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரித் (23) மற்றும் தருமபுரியைச் சேர்ந்த சரண் (23) ஆகிய இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்த துரதிர்ஷ்டசாலி மாணவர்கள் ஆவர். இவர்கள் இருவரும் திருவள்ளூர் மாவட்டம், மஞ்சங்கரணையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். மூன்றாமாண்டு படித்து வந்தனர்.
இவர்களுடன் பயின்று வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் (24) மற்றும் அபான் (24) ஆகிய இரு மாணவர்கள் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இந்த நான்கு மாணவர்களும் பொன்னேரி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, கல்லூரிக்குச் சென்று வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு, இவர்கள் நால்வரும் சென்னையிலிருந்து காரில் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை வழியாக பொன்னேரி நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.
காரனோடை மேம்பாலத்தில் கார் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக வாகனத்தின் கட்டுப்பாடு இழக்கப்பட்டது. இதனால் நிலைதடுமாறிய கார், இடதுபுறமிருந்த சாலையோரத் தடுப்பில் அதிவேகமாக மோதி தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்த விபத்தின் வீரியத்தில் காரின் முன்பகுதியும் பக்கவாட்டுப் பகுதிகளும் முற்றிலும் நசுங்கி உருக்குலைந்தன. இதில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய அம்ரித் மற்றும் சரண் ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். காரை ஓட்டி வந்த முகேஷும், அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்த அபானும் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்த மாணவர்களை மீட்டு அவர்கள் படிக்கும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக அனுமதித்தனர். விபத்தில் பலியான இரு மாணவர்களின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்து குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

