10 வயது மாற்றுத்திறனாளி மகளுக்குப் போதைப்பொருள் கொடுத்த வழக்கில் தாய் மீது குற்றச்சாட்டு

10 வயது மாற்றுத்திறனாளி மகளுக்குப் போதைப்பொருள் கொடுத்த வழக்கில் தாய் மீது குற்றச்சாட்டு

பிரான்சின் மார்செய்ல் (Marseille) நகரில், 10 வயதான தனது மாற்றுத்திறனாளி மகளுக்குக் கோகெய்ன் (Cocaïne) மற்றும் ஃபெண்டானில் (Fentanyl) போன்ற கொடிய போதைப்பொருட்களைக் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட தாயின் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இவருக்கு 4 ஆண்டுகள் நன்னடத்தை நிபந்தனையுடன் கூடிய ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை (Prison avec sursis probatoire) வழங்க அரசுத் தரப்பு கோரியுள்ளது.

கடந்த பெப்ரவரி 14, 2022 அன்று, அரியவகை நரம்பியல் மரபணு நோயால் (Maladie neurogénétique rare) கடுமையாகப் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமி, மார்செய் டிமோன் (Timone) குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சையின் போது சிறுமியின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து, மார்ச் 11 அன்று அவர் கோமா (Coma) நிலைக்குச் சென்றார்.

சிறுமியின் இரத்தம், சிறுநீர் மற்றும் முடிகளில் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளில் (Examens toxicologiques), கோகெய்ன் மற்றும் மிக வீரியமான ‘ஃபெண்டானில்’ ஆகிய போதைப்பொருட்கள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், 2020-ஆம் ஆண்டில் சேகரிக்கப்பட்ட சிறுமியின் தண்டுவட திரவ மாதிரிகளிலும் கோகெய்ன் எச்சங்கள் இருந்தது மருத்துவர்களை அதிரவைத்தது.

சிறார் நீதிபதியின் உத்தரவின்படி, மருத்துவமனையில் பெற்றோர்களின் வருகை (Visites parentales) தடை செய்யப்பட்டவுடன், சிறுமியின் உடல்நிலையில் வியக்கத்தக்க வகையில் விரைவான முன்னேற்றம் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் சிறுமியின் தந்தைக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என விசாரணையில் உறுதியானதால், மகளின் மீது அதிக பாசம் கொண்டவராக வர்ணிக்கப்பட்ட தாய் மீது முழுக் குற்றச்சாட்டும் திரும்பியது.

50 வயதான தாய் சமந்தா (Samantha) தன் மீதான குற்றச்சாட்டுகளைக் கடுமையாக மறுத்தார். “நான் போதைப்பொருள் பயன்படுத்துபவள் என்பதால், நான் ஒரு மோசமான தாய் என முன்கூட்டியே என்னைக் குற்றவாளியாக்கிவிட்டார்கள்” என வாதிட்டார்.

“நீங்கள் என்னை ஆயிரம் ஆண்டுகள் சிறையில் அடைக்கலாம் (Vous pouvez me mettre mille ans en prison); ஆனால் நான் என் குழந்தைக்குத் தீங்கு செய்தேன் என்று சொல்வதுதான் என்னை மிகவும் வேதனைப்படுத்துகிறது” என்று கண்ணீருடன் தெரிவித்தார். தன் முன்னாள் கணவரே தன்னைச் சதி செய்து மாட்டிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

சிறுமியின் அறையில் தான் கோகெய்ன் பயன்படுத்தியதைத் தாய் ஒப்புக்கொண்டுள்ளார். சிறுமியின் உணவு மற்றும் அவர் பயன்படுத்தும் அன்றாடப் பொருட்களில் போதைப்பொருளின் எச்சங்கள் படிந்திருந்தன. எனவே, சிறுமிக்கு இது வேண்டுமென்றே கொடுக்கப்பட்டதா அல்லது மறைமுகமாகப் பரவியதா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும்.

தற்போது சிறுமியின் பாதுகாப்பைப் (Garde) பெற்றுள்ள அவரது தந்தை, “அவள் (தாய்) திட்டமிட்டுத்தான் என் மகளுக்குப் போதைப்பொருள் கொடுத்தாள் என்பதில் எனக்கு எவ்விதச் சந்தேகமும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார். தாயிடமிருந்து பெற்றோருக்கான உரிமையைப் (Autorité parentale) பறிக்க வேண்டும் எனத் தந்தையின் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசுத் தரப்பு வழக்கறிஞர் (Parquet), அந்தத் தாய்க்குச் சிறைத்தண்டனையோடு சேர்த்து கட்டாய மனநல சிகிச்சை மற்றும் குறிப்பிட்ட நபர்களைத் தொடர்புகொள்ளத் தடை ஆகியவற்றை வலியுறுத்தியுள்ளார். இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு வருகிற ஜூன் 3 அன்று வழங்கப்படவுள்ளது.

Recommended For You

About the Author: admin