உலகக் கோப்பை 2026: பிரான்ஸ் அணியின் 26 வீரர்கள் பட்டியல் வெளியீடு

உலகக் கோப்பை 2026: பிரான்ஸ் அணியின் 26 வீரர்கள் பட்டியல் வெளியீடு – பயிற்சியாளராக டெஷாம்ப்பின் கடைசித் தொடர்!

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பைக் கால்பந்துத் தொடருக்கான பிரான்ஸ் அணியின் 26 பேர் கொண்ட இறுதிப் பட்டியலை, அணியின் தலைமைப் பயிற்சியாளர் டிடியர் டெஷாம்ப்(Didier Deschamps) இன்று (மே 14, வியாழக்கிழமை) வெளியிட்டார். பிரான்ஸ் தேசிய அணியின் பயிற்சியாளராக இதுவே இவரது கடைசித் தொடராகும்.

மூன்றாவது முறையாகக் கோப்பையை வெல்லும் முனைப்பு!

ஒவ்வொரு மாபெரும் தொடருக்கு முன்பும் வழக்கமாக நடப்பதைப் போலவே, பிரான்ஸ் அணியின் கூட்டாளியான TF1 தொலைக்காட்சியின் இரவு 8 மணி செய்திகளில் இந்தப் பட்டியலை அவர் வெளியிட்டார்.

1998 மற்றும் 2018-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்த 26 பேர் கொண்ட பிரான்ஸ் படை களமிறங்கவுள்ளது.

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் வரும் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெறவுள்ள இந்த உலகக் கோப்பைத் தொடர் மிகவும் சிறப்பானது (வரலாற்றில் முதல்முறையாக 48 நாடுகள் பங்கேற்கின்றன).

இந்த மாபெரும் தொடர் முடிவடைந்தவுடன், 57 வயதான டெஷாம்ப் தனது பதவியிலிருந்து முறைப்படி விடைபெறவுள்ளார்.

அணியின் தேர்வைப் பொறுத்தவரை பெரிய அளவிலான ஆச்சரியங்கள் ஏதுமில்லை; சமீபத்திய போட்டிகளின் அடிப்படையில் எதிர்பார்க்கப்பட்ட சிறந்த வீரர்களே அணியில் இடம்பெற்றுள்ளனர்.

உலகக் கோப்பைக்கான பிரான்ஸ் அணியின் முழு விவரம்:

இலக்குக் காவலர்கள் (Gardiens de but):

மைக் மெய்னான் (Mike Maignan), ரொபின் ரிஸர் (Robin Risser), பிரிஸ் சாம்பா (Brice Samba).

தற்காப்பு வீரர்கள் (Défenseurs):

லூகாஸ் டினே (Lucas Digne), மாலோ குஸ்டோ (Malo Gusto), லூகாஸ் ஏர்னாண்டஸ் (Lucas Hernandez), தியோ ஏர்னாண்டஸ் (Théo Hernandez), இப்ராஹிமா கோனாட்டே (Ibrahima Konaté), ஜூல் குண்டே (Jules Koundé), மேக்ஸென் லாக்ருவா (Maxence Lacroix), வில்லியம் சலிபா (William Saliba), டயோ உபமெகானோ (Dayot Upamecano).

நடுக்கள வீரர்கள் (Milieux de terrain):

என்கோலோ கான்டே (N’Golo Kanté), மானு கோனே (Manu Koné), அட்ரியன் ரொபியோட் (Adrien Rabiot), அரேலியன் சௌமேனி (Aurélien Tchouaméni), வாரன் சயீர்-எமரி (Warren Zaïre-Emery).

முன்கள வீரர்கள் (Attaquants):

மாக்னஸ் அக்லியோஷ் (Maghnes Akliouche), பிராட்லி பார்கோலா (Bradley Barcola), ராயன் செர்கி (Rayan Cherki), உஸ்மான் டெம்பேலே (Ousmane Dembélé), டெசிரே டூவே (Désiré Doué), ஜோன்-பிலிப் மாடேட்டா (Jean-Philippe Mateta), கிலியன் எம்பாப்பே (Kylian Mbappé), மைக்கேல் ஒலீஸ் (Michael Olise), மார்கஸ் துராம் (Marcus Thuram).

Recommended For You

About the Author: admin