துலூஸ் அருகே கொடிய நஞ்சுடைய நாகப்பாம்பு: நகர மக்களுக்கு அவசர எச்சரிக்கை!
பிரான்ஸின் துலூஸ் (Toulouse) நகரத்திற்கு அருகிலுள்ள Castelgines பகுதியில் மிகவும் கொடிய நஞ்சுடைய நாகப்பாம்பு (Cobra) ஒன்று சுதந்திரமாகச் சுற்றித் திரிவது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அங்கு பொது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (மே 12) இரவு இந்த அறிவிப்பை நகர மன்றம் (Mairie) வெளியிட்டுள்ளது.
Castelgines நகர மன்றம் வெளியிட்டுள்ள அவசரச் செய்தியில், “நமது பகுதியில் கொடிய நஞ்சுடைய நாகப்பாம்பு ஒன்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, மக்கள் வெளியே செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
” புற்கள் உயரமாக வளர்ந்துள்ள பகுதிகளைத் தவிர்க்கவும்; குறிப்பாக உங்கள் குழந்தைகளையும் செல்லப்பிராணிகளையும் கவனமாகப் பார்த்துக்கொள்ளவும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, நகரத்தில் உள்ள அனைத்துப் பொதுப் பூங்காக்கள், மயானங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் பொது அரங்குகள் உடனடியாக மூடப்பட்டுள்ளன.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் நேற்று புதன்கிழமையன்று அப்பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளி (Collège), பொழுதுபோக்கு மையம் மற்றும் சிறுவர் காப்பகம் ஆகியவற்றுக்கும் விடுமுறை அளிக்கப்பட்ட து.
இந்தபி பாம்பைக் கண்டால் எக்காரணம் கொண்டும் பொதுமக்கள் அதன் அருகில் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.
“பாம்பைக் கண்டால் பாதுகாப்பான தொலைவில் நின்றவாறே நிழல்ப் படம் அல்லது காணொளி எடுத்துக்கொண்டு, உடனடியாக 18 என்ற அவசர எண்ணிற்கு அழைக்கவும். தீயணைப்புத் துறையின் சிறப்புக் குழுவினர் அதனைப் பிடிக்கும் தீவிரப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலைமை குறித்த அடுத்தகட்டத் தகவல்கள் மக்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பு: ஹர்ஸ் (Hers) ஆற்றின் அருகே அமைந்துள்ள நடுநிலைப் பள்ளிக்கு அருகிலேயே இந்த நாகப்பாம்பு நடமாடியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாலேயே இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வெப்ப வலய நாடுகளில் அதிகமாக உள்ள இவ்வகை நச்சு பாம்பு குளிர் வலய நாடான பிரான்ஸில் காணப்பட்டது அதிகாரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியள்ளது.

