தாயகம் திரும்பும் ஆசையால் பிரான்சில் அகதி அந்தஸ்தை துறப்பவரா நீங்கள்?

தாயகம் திரும்பும் ஆசையால் பிரான்சில் அகதி அந்தஸ்தை துறப்பவரா நீங்கள்? காத்திருக்கும் சட்டப் பேராபத்துகள்!

பாரிஸ்: பிரான்சில் தஞ்சம் புகுந்து அகதி அந்தஸ்து பெற்ற பல இலங்கையர்கள், தாயகத்தில் உள்ள உறவினர்களைக் காணவும், சுபநிகழ்வுகள் அல்லது இறுதிச் சடங்குகளில் பங்கேற்கவும் ஒரு புதிய, ஆனால் மிக ஆபத்தான பாதையைத் தேர்ந்தெடுக்கின்றனர். அதுதான் ‘அகதி அந்தஸ்தை இரத்து செய்துவிட்டு, தொழில்முறை வசிப்பிட அனுமதிக்கு (Changement de statut pour motif professionnel) மாறுவது’.

 

இது சட்டப்படி சாத்தியம் என்றாலும், இது ‘உள்ளதை விட்டுவிட்டு பறக்க ஆசைப்படும்’ ஒரு பகடைக்காய் ஆட்டம் என்கின்றனர் குடிவரவுச் சட்ட நிபுணர்கள். இதன் பின்னணி என்ன? இதன் சாதக, பாதகங்கள் என்ன? விரிவாகப் பார்ப்போம்.

 

இந்த மாற்றத்தை செய்து முடிப்பவர்களுக்குப் சில நன்மைகள் காத்திருந்தாலும் பல எதிர்மறை விளைவுகளும் உள்ளன .

 

நன்மைகள் :அகதி என்ற அடையாளம் நீங்கி, எந்தத் தடையுமின்றி எப்போது வேண்டுமானாலும் இலங்கைக்குச் சென்று வரலாம். திருமணங்கள், இறுதிச் சடங்குகள் என குடும்பத்தினரோடு மீண்டும் இணையலாம்.

 

இலங்கை கடவுச்சீட்டு: பாரிஸில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக இலங்கை கடவுச்சீட்டைப் (Passport) பெற்றுக்கொள்ளலாம்.

 

ஆனால்… திரைக்குப் பின்னால் காத்திருக்கும் ‘பேராபத்துகள்’

இந்த முடிவை எடுப்பதற்கு முன், பிரான்ஸ் சட்ட அமைப்பில் உள்ள யதார்த்தத்தைப் புரிந்துகொள்வது மிக அவசியம். வெற்றி பெற்றால் சுதந்திரம், தோல்வியடைந்தால் பிரான்சில் ஒட்டுமொத்த வாழ்க்கையும் கேள்விக்குறி!

 

விசாவுக்கு உத்தரவாதம் இல்லை (No Guarantee):

 

அகதி அந்தஸ்தை நீங்கள் ரத்து செய்த மறுகணமே, பிரெஞ்சு மாகாண நிர்வாகம் (Préfecture) உங்களுக்கு உடனடியாக வேலைக்கான விசாவை வழங்கிவிடாது. இந்தத் தொழிலாளர் விசாவைப் பெற நிரந்தர வேலை ஒப்பந்தம் (CDI), பிரான்ஸ் அரசின் குறைந்தபட்ச சம்பளத்தை விட அதிக வருமானம், மற்றும் தொழிலாளர் துறையின் (DREETS) அனுமதி என நிபந்தனைகள் மிகக் கடுமையாக இருக்கும். இதில் ஒன்று குறைந்தாலும் விசா நிராகரிக்கப்படும்.

 

அதேபோல இந்த விசாவை பெற்றுக்கொண்டு பிரெஞ்சு விதிமுறைகளை மீறி நடந்தால் ,அதாவது தொடர்ந்து பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்து பிடிபடுவது,முறையற்ற பணப்பரிவர்த்தனை , வீட்டில் துணை வாடகைக்கு ஆட்களை உரிய அனுமதி பெறாமல் தங்கவைப்பது , சொந்தத் தொழில் செய்தல் வருமானத்தை குறைத்துக்காட்டுவது , வதிவிட அண்மதியற்றவர்களி வேலைக்கு வைத்திருப்பது, 6 மதத்துக்குமேல் வேலையில்லாமல் இருப்பது ,அல்லது வேலை இழப்புக்கள் உதவித்தொகையை பெற்றுக்கொண்டு பதிவு செய்யாமல் வேலை செய்வது முதலாவை கண்டு பிடிக்கப்பட்டால் இந்த வதிவிட அனுமதி இரத்துச்செய்யப்படும்

 

நாடு கடத்தப்படும் அபாயம் (OQTF):

 

ஒருவேளை Préfecture உங்கள் விசா கோரிக்கையை நிராகரித்தால் நிலைமை விபரீதமாகும். அகதி அந்தஸ்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டதால், ஒரே இரவில் நீங்கள் ‘சட்டவிரோத குடியேறிகள்’ (Sans-papiers) என்ற நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். இதன் விளைவாக, நாட்டை விட்டு வெளியேறக் கோரும் நாடு கடத்தல் உத்தரவு (OQTF) பிறப்பிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

 

10 வருட அட்டை பறிபோகும்:

 

அகதியாக நீங்கள் அனுபவித்த 10 வருட வதிவிட அட்டை (Carte de résident) பறிக்கப்படும். தொழில்முறை விசா கிடைத்தாலும் கூட, ஆரம்பத்தில் ஒவ்வொரு வருடமும் வேலை இருப்பதை நிரூபித்துப் புதுப்பிக்க வேண்டிய 1 வருட அட்டையே (Carte d’un an) கைகளில் கிடைக்கும்.

 

குடும்பத்தின் எதிர்காலம் அந்தரத்தில்:

 

கணவரின் அகதி அந்தஸ்தை அடிப்படையாகக் கொண்டு பிரான்சுக்கு வந்த மனைவி மற்றும் பிள்ளைகளின் நிலை மிக மோசமாகப் பாதிக்கப்படலாம். அவர்களின் வதிவிட அனுமதியும் பறிக்கப்படலாம் அல்லது கடுமையான சட்டச் சிக்கல்களுக்கு உள்ளாகலாம்.

 

பிரெஞ்சு குடியுரிமை பெறுவதில் சிக்கல்:

 

அகதியாக இருப்பவர்கள் பிரெஞ்சு குடியுரிமைக்கு விண்ணப்பிப்பது சற்று எளிதானது. ஆனால், சாதாரணத் தொழிலாளியாக மாறினால், குடியுரிமை பெறுவதற்கான நிபந்தனைகள் பல மடங்கு கடுமையாக்கப்படும்.

 

நிபுணர்களின் எச்சரிக்கை

 

சுருக்கமாகச் சொன்னால், உறவுகளைப் பார்க்கும் இலங்கைக்கு சென்றுவருவதற்கும் எடுக்கப்படும் இந்த முடிவு, பிரான்சில் நீங்கள் பல வருடங்களாகக் கட்டியெழுப்பிய சட்டப்பூர்வமான இருப்பையே சீட்டுக்கட்டு போல சரியச் செய்துவிடலாம்.

 

இந்த நடைமுறையை முயற்சிக்க விரும்புபவர்கள், எந்தக் காரணத்தைக் கொண்டும் சுயமாக முடிவெடுக்காமல், பிரெஞ்சு குடிவரவு சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு சிறந்த சட்டத்தரணியின் (Avocat spécialisé en droit des étrangers) ஆலோசனையைப் பெறுவது மட்டுமே உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கும்.

Recommended For You

About the Author: admin