கழற்றிவிட்ட எம்பிக்கள்.. சட்டப் போராட்டத்தை கையில் எடுத்த ஆம் ஆத்மி! பாஜகவின் கேம்!

கழற்றிவிட்ட எம்பிக்கள்.. சட்டப் போராட்டத்தை கையில் எடுத்த ஆம் ஆத்மி! பாஜகவின் கேம்!

ராகவ் சதா, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட 7 ஆம் ஆத்மி எம்பிக்கள் பாஜகவில் இணைந்திருக்கின்றனர். இதன் காரணமாக, ஆம் ஆத்மி மிகப்பெரிய பின்னடைவை எதிர் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், பாஜகவில் இணைந்த 7 எம்பிக்களையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆம் ஆத்மி வலியுறுத்தியுள்ளது.

 

அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், பாஜகவில் இணைந்த 7 மாநிலங்களவை எம்பிக்களையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி மாநிலங்களவைத் தலைவரிடம் மனு அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 

பாஜகவில் இணைந்த ராகவ் சதா, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட 7 எம்பிக்களின் பதவியைப் பறிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி, மாநிலங்களவை தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணனிடம் மனு அளித்துள்ளது. இதற்காக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மற்றும் லோக்சபா முன்னாள் செயலாளர் பி.டி.டி. ஆச்சாரி ஆகியோரிடம் ஆம் ஆத்மி ஆலோசனை நடத்தியுள்ளது. அவர்கள், இந்த எம்பிக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டியவர்கள் என்ற கருத்தைத் தெரிவித்துள்ளனர்.

 

என்னதான் ஆம் ஆத்மி இப்படி சொன்னாலும், சட்டத்தில் இந்த எம்பிக்கள் மீது நடவடிக்கை எடுக்க எந்த இடமும் இல்லை. மொத்த எம்பிக்களில் (10 பேரில் 7 பேர்) 3-ல் 2 பங்கு ஆதரவுடன் பிரிந்து செல்வதால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. இத்தகைய கட்சித் தாவல் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று சஞ்சய் சிங் வாதிடுகிறார். சட்ட வல்லுநர்களிடையே இதில் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

 

வெளியேறிய எம்பிக்கள் சொன்ன காரணம் என்ன?

 

வெளியேறிய எம்பிக்கள் சில காரணங்களைக் குறிப்பிட்டுள்ளனர். கட்சிக்குள் நிலவும் ஏமாற்றம் மற்றும் அதிருப்தி காரணமாக வெளியேறியிருப்பதாக ராகவ் சதாவும், பஞ்சாபின் கடன் சுமை, விவசாயப் பிரச்சனைகள், போதைப்பொருள் விவகாரம் மற்றும் தலைமைத்துவத்தைச் சந்திக்க முடியாத நிலை இருப்பதால் வெளியேறியிருப்பதாக விக்ரம்ஜித் சாஹ்னியும் தெரிவித்திருக்கின்னர்.

 

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், இந்த எம்பிக்களைத் திரும்பப் பெற அனுமதி கோரிக் குடியரசுத் தலைவரைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளார். ஆனால், இந்திய அரசியலமைப்பில் எம்பிக்களைத் திரும்பப் பெறும் ‘ரீகால்’ முறை தற்போது நடைமுறையில் இல்லை.

 

பஞ்சாப் மாநில எம்.எல்.ஏ-க்கள் ராகவ் சதாவுடன் தொடர்பில் இருப்பதாக வரும் செய்திகளை சஞ்சய் சிங் மறுத்துள்ளார். இது பாஜக பரப்பும் பொய்ப் பிரச்சாரம் என்றும், இந்த எம்பிக்களின் பதவி விரைவில் பறிபோகப் போவதால் எந்த எம்.எல்.ஏ-வும் அவர்களுடன் செல்ல மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: admin