8 வருடம் இமயமலை பனியில் தவம்… 10,000 அடி உயரத்தில் கம்பீரமாகப் பூத்த ‘பனி’ தாமரை!
படைப்பில் சில விஷயங்களை வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே காணக்கிடைக்கும் அதிசயம் என்று சொல்வோம்.
அதற்கு மிகச்சிறந்த உதாரணம் இந்த ‘ஸ்னோ லோட்டஸ்’ (Snow Lotus). இமயமலையின் கடும் குளிரில் 8 ஆண்டுகள் காத்திருந்து, ஒரே ஒருமுறை பூத்து குலுங்கும் இந்த மலரின் வீடியோ தற்போது இணையத்தை அதிரவைத்து வருகிறது.
இந்த மலர் சாதாரண தோட்டங்களில் பூப்பதில்லை. கடல் மட்டத்திலிருந்து 10,000 அடிக்கும் அதிகமான உயரத்தில், ஆக்சிஜன் குறைவாக உள்ள இமயமலை மற்றும் தியான்ஷன் மலைச்சிகரங்களில் மட்டுமே இது வளர்கிறது. உறைபனி குளிர், பலத்த காற்று, சுட்டெரிக்கும் சூரிய ஒளி என எதற்கும் அஞ்சாமல் பாறைகளுக்கு இடையே இது கம்பீரமாகப் பூத்து நிற்கிறது.
ஒரு செடி வளர்ந்து பூ விடுவதற்கு 5 முதல் 8 ஆண்டுகள் வரை ஆகிறது. அத்தனை ஆண்டுகள் வளர்ந்தாலும், அந்தச் செடி தனது வாழ்நாளில் ஒரே ஒருமுறை மட்டுமே பூக்கும். பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமல்லாமல், வாத நோய் (Arthritis) மற்றும் உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குணப்படுத்தும் அபூர்வ மருத்துவ குணங்கள் இதில் உள்ளன.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், பின்னணியில் பனி படர்ந்த மலைகள் தெரிய, பலத்த காற்றிலும் அசைந்து கொடுக்காமல் பாறைகளுக்கு மேல் அந்த மலர் பூத்திருப்பது பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. ‘டைம்ஸ் நவ்’ (Times Now) நிறுவனம் பகிர்ந்த இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்து வியந்து வருகின்றனர்.

