பிரான்ஸ் அரசுத்தலைவர் மாளிகையில் பல லட்சம் மதிப்பிலான பீங்கான் பாத்திரங்கள் திருட்டு

பிரான்ஸ் அரசுத்தலைவர் மாளிகையில் பல லட்சம் மதிப்பிலான பீங்கான் பாத்திரங்கள் திருட்டு: மாளிகை ஊழியர் உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் விசாரணை!

பிரான்ஸ் அரசுத்தலைவர் மாளிகையான எலிசேயில் (Élysée) பல லட்சம் மதிப்பிலான விலைமதிப்பற்ற பீங்கான் பாத்திரங்களைத் திருடிய குற்றத்திற்காக, மாளிகையின் ஊழியர், அவரது இணையர் மற்றும் அதனை வாங்கியவர் என மூவர் மீது பாரிஸ் நீதிமன்றத்தில் இன்று (ஏப்ரல் 16) விசாரணை ஆரம்பமாகியது . குற்றவாளிகளுக்கு மின்னணு வளையம் அணிவிக்கப்பட்டுச் சிறைத்தண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ளது.

 

அரசுத்தலைவர் மாளிகையில் நடைபெறும் முக்கிய அரசு விருந்துகளின் போது பயன்படுத்தப்படும் பிரத்யேகமான பீங்கான் தட்டுகள், தேநீர்க் கோப்பைகள் மற்றும் கிண்ணங்கள் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து காணாமல் போயுள்ளன. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையிலேயே மாளிகைக்குள்ளேயே நடந்த இந்தத் திருட்டு அம்பலமானது.

 

தொமா என்பவர் அதிபர் மாளிகையில் 2020-ஆம் ஆண்டு முதல் உணவு மேசை மற்றும் பாத்திரப் பொறுப்பாளராகப் பணிபுரிந்து வந்தவர். மாளிகையில் சற்று சேதமடைந்த பொருட்களை ஊழியர்கள் எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. இந்த அனுமதியைத் தவறாகப் பயன்படுத்தி, முற்றிலும் நல்ல நிலையில் உள்ள ‘செவ்ரெஸ்’ (Manufacture de Sèvres) ரகப் பீங்கான் பாத்திரங்களைத் தொமா திருடியுள்ளார்.

 

முதலில் அப்பொருட்களின் அழகுக்காகத் திருடியதாகக் கூறிய அவர், பின்னர் தனது பெரும் கடன்களை அடைப்பதற்காக அவற்றை விற்கத் தொடங்கியதாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். “வீட்டில் சமையல் எரிவாயு உருளையைக் கூட நிரப்ப முடியாத வறுமை நிலையில் இருந்தேன்” என அவர் தனது செயலுக்குக் காரணம் கற்பித்துள்ளார்.

 

தொமா திருடி வரும் பாத்திரங்களை அவரது இணையரும், பழம்பொருள் விற்பனையாளருமான டேமியன் ஜி. என்பவர் முகநூல் (Facebook) குழுக்கள் மூலமாக விற்றுள்ளார். பழங்காலப் பீங்கான் பாத்திரங்களைச் சேகரிப்பவர்களுக்கான பிரத்யேகக் குழுக்களில் இவர்கள் வாடிக்கையாளர்களைத் தேடியுள்ளனர்.

 

அப்படித்தான் பாரிஸின் புகழ்பெற்ற லூவர் (Louvre) அருங்காட்சியகக் காவலரான கிஸ்லெய்ன் எம். இவர்களிடம் சிக்கியுள்ளார். தீவிர பழம்பொருள் சேகரிப்பாளரான அவர், சுமார் 150 பொருட்களை 15,000 யூரோக்கள் கொடுத்து வாங்கியுள்ளார். பொருட்களை வாங்கும் ஆவலில், இதன் பின்னணியை ஆராயாமல் அவர் “குருட்டுத்தனமாக” வாங்கிவிட்டதாக அவரது வழக்கறிஞர் வாதிடுகிறார்.

 

இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் கீழ்க்கண்டவாறு தண்டனைகளைக் கோரியுள்ளார்:

 

தொமா (திருடியவர்): 2 ஆண்டு சிறை (அதில் 16 மாதங்கள் நிறுத்தி வைப்பு) மற்றும் 10,000 யூரோக்கள் அபராதம்.

 

டேமியன் (விற்றவர்): 2 ஆண்டு சிறை (அதில் 18 மாதங்கள் நிறுத்தி வைப்பு) மற்றும் 10,000 யூரோக்கள் அபராதம்.

 

கிஸ்லெய்ன் (வாங்கியவர்): 2 ஆண்டு சிறை (அதில் 20 மாதங்கள் நிறுத்தி வைப்பு) மற்றும் 10,000 யூரோக்கள் அபராதம்.

 

திருடப்பட்ட பாத்திரங்களைத் தயாரித்த ‘செவ்ரெஸ்’ நிறுவனம் இந்த வழக்கில் தங்களுக்கு 3,70,000 யூரோக்கள் நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் எனக் கோரியுள்ளது. ஒவ்வொரு தட்டின் மதிப்பையும் தலா 5,000 யூரோக்கள் என அது கணக்கிட்டுள்ளது. ஆனால், பழைய பொருட்கள் ஏலத்தில் 50 முதல் 1,500 யூரோக்களுக்கே விற்கப்படுவதாகக் கூறி, குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் இந்த நஷ்ட ஈட்டுத் தொகையைக் கடுமையாக எதிர்த்து வாதிட்டு வருகிறார்.

Recommended For You

About the Author: admin