உங்களைச் சுற்றியுள்ள மின்காந்த அலைகளின் தாக்கத்தை அளவிடுவது எப்படி? பிரான்ஸ் அரசின் இலவசச் சேவை!
நாள்தோறும் நாம் பயன்படுத்தும் தொலைக்காட்சி அலைவாங்கிகள், அலைபேசிகள், வீட்டு உபயோகப் மின்பொருட்கள் மற்றும் கம்பியில்லா இணையம் (Wi-Fi) எனப் பலவற்றிலும் மின்காந்த அலைகள் (Electromagnetic waves) நிறைந்துள்ளன. இந்த அலைகளின் தாக்கத்தை அறிந்துகொள்ள நீங்கள் விரும்பினால், பிரான்ஸ் அரசாங்கம் அதற்காகவே ஒரு பிரத்யேக இலவசச் சேவையை வழங்கி வருகிறது.
தங்களைச் சுற்றியுள்ள மின்காந்த அலைகளின் அளவை அளவிட விரும்புவோர் எவரும் இதற்காக விண்ணப்பிக்கலாம். உங்கள் சொந்த வீடு, அடுக்குமாடிக் குடியிருப்பு மட்டுமின்றிப் பொது இடங்களான பூங்காக்கள், பள்ளிகள் மற்றும் பணியிடங்கள் ஆகியவற்றிற்கும் இந்தச் சோதனையைக் கோர முடியும்.
‘தேசிய அலைவரிசை முகமை’ (ANFR) வழங்கும் இந்த இலவசச் சேவையின் மூலம் பின்வரும் தகவல்களை நீங்கள் அறிந்துகொள்ளலாம்:
உங்களைச் சுற்றியுள்ள மின்காந்த அலைகளின் ஒட்டுமொத்த அளவை அறிந்துகொள்வதுடன், அவை அரசாங்கம் நிர்ணயித்துள்ள பாதுகாப்பான வரம்புகளுக்குள் உள்ளனவா என்பதைச் சரிபார்க்கலாம்.
வீட்டில் உள்ள ஒவ்வொரு கருவியும் (தொலைக்காட்சி, வானொலி, அலைபேசி, கம்பியில்லா இணையம் போன்றவை) தனித்தனியாக எவ்வளவு அலைகளை வெளியிடுகின்றன என்பதைக் கண்டறியலாம்.
அலைவரிசைகளின் (Frequency bands) அடிப்படையில் மிக விரிவான பகுப்பாய்வு அறிக்கையைப் பெறலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?
மிகவும் எளிமையான இந்த வழிமுறைகள் முற்றிலும் இலவசமானவை:
இணையவழிப் படிவம்: முதலில் mesures.anfr.fr என்ற இணையதளத்திற்குச் சென்று அங்குள்ள படிவத்தை நிரப்ப வேண்டும்.
அங்கீகாரம் பெறுதல்: நிரப்பப்பட்ட படிவத்தில் அங்கீகரிக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், வட்டாரச் சுகாதார முகமைகள் அல்லது பதிவுபெற்ற சங்கங்களிடம் கையொப்பம் பெற வேண்டும். கையொப்பமிடப்பட்ட படிவத்தைத் தேசிய அலைவரிசை முகமைக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவர்கள் சார்பாகச் சுதந்திரமான மற்றும் அங்கீகாரம் பெற்ற ஓர் ஆய்வுக்கூடம் நேரடியாக வந்து அளவீடுகளைச் செய்யும்.
பரிசோதனை முடிந்த பிறகு, குறிப்பிட்ட இடம் பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டுள்ளதா என்பதைக் குறிக்கும் அறிக்கை உங்களுக்கு வழங்கப்படும். மேலும், அதன் சுருக்கமான அறிக்கை நகர சபைக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், வீட்டின் உரிமையாளர் அல்லது குடியிருப்பாளருக்கும் அனுப்பி வைக்கப்படும்.
கூடுதல் தகவல்களுக்கு:
‘கார்டோரேடியோ’ (Cartoradio) தளம்: இந்தத் தளத்தில் உங்கள் முகவரியை உள்ளீடு செய்தால், உங்கள் பகுதியில் ஏற்கனவே அளவிடப்பட்ட மின்காந்த அலைகளின் முடிவுகளை நீங்கள் நேரடியாகக் காண முடியும்.
இது குறித்த மேலும் பல தகவல்களை அறிய “மின்காந்த அலைகளைக் கண்காணித்தல் மற்றும் அளவிடுதல்” என்ற அரசின் கையேட்டைப் பதிவிறக்கம் செய்து படிக்கலாம். அல்லது 0970 818 818 என்ற கட்டணமில்லா உதவி எண்ணிற்குத் திங்கள் முதல் வெள்ளி வரை (காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரையிலும்) தொடர்புகொண்டு சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம்.

