மத்திய கிழக்கு பதற்றம்: போர்நிறுத்தமும், உலக நாடுகளின் அடுத்தகட்ட நகர்வுகளும்!
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் இஸ்ரேல் – லெபனான் இடையிலான போர்நிறுத்தம் தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 17) வெளியாகியுள்ள முக்கியச் செய்திகளின் தொகுப்பு:
ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாக்கப் பாரீஸில் தீவிர ஆலோசனை
உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாப்பது குறித்துப் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் (எலிசே மாளிகையில்) முக்கியக் கூட்டமொன்று தொடங்கியுள்ளது.
பிரான்ஸ் அரசுத்தலைவர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் ஆகியோரின் தலைமையில் காணொளி வாயிலாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில், ஜெர்மனியின் தற்போதைய அரசுத்தலைவர் பிரெட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz), இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி உட்பட சுமார் 40 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.
போரில் நேரடியாக ஈடுபடாத நாடுகளை ஒன்றிணைத்து, நீரிணையில் கப்பல்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.
போர்நிறுத்தக் காலக்கட்டத்தில் ஹார்முஸ் நீரிணை முழுமையாகத் திறந்திருக்கும் என ஈரான் அறிவித்துள்ளதால், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 5% வரை கணிசமாகக் குறைந்துள்ளது.
அமெரிக்காவின் முற்றுகைக்குப் பிறகு முதல்முறையாக, 5 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயுடன் ஈரானின் மூன்று சரக்குக் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையைக் கடந்துள்ளன. அதேசமயம், மாற்றுப் பாதையாக செங்கடல் வழியாகத் தனது எண்ணெய் கப்பலைத் தென்கொரியா அனுப்பியுள்ளது.
இஸ்ரேல் – லெபனான் மோதலில்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்னெடுத்த 10 நாள் போர்நிறுத்தம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள போதிலும், எல்லைகளில் பதற்றம் முழுமையாகத் தணியவில்லை.
நேரடிப் பேச்சுவார்த்தை மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்துள்ள லெபனான் அதிபர் ஜோசப் அவுன், இஸ்ரேலியப் படைகள் வெளியேற வேண்டும் மற்றும் சிறைபிடிக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
போர்நிறுத்தம் அமலில் இருந்தாலும், தங்களது ராணுவ நடவடிக்கை இன்னும் “முடிவடையவில்லை” என இஸ்ரேலியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும், இஸ்ரேலின் துரோகத்தை நம்ப முடியாது என்பதால் எங்களது கைகள் “துப்பாக்கியின் விசையிலேயே” (Trigger) இருக்கும் என ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரித்துள்ளது.
போர்நிறுத்தம் அமலுக்கு வருவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு, டயர் (Tyr) நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 6 குடியிருப்புகள் தரைமட்டமாகின; இதில் 13 பேர் உயிரிழந்தனர் மற்றும் 35 பேர் காயமடைந்தனர்.
இ ராணுவ நடவடிக்கைகள் மூலம் போர்நிறுத்தம் மீறப்படுவது குறித்துக் கவலை தெரிவித்துள்ள பிரான்ஸ் அரசுத்தலைவர் மக்ரோன், ஹிஸ்புல்லா அமைப்பு ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்றும், இஸ்ரேல் லெபனானின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
துருக்கியில் மாபெரும் ராஜதந்திர மாநாடு
மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில், துருக்கியின் அண்டல்யா (Antalya) நகரில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாபெரும் மாநாடு இன்று தொடங்கியுள்ளது.
சிரிய அதிபர் அஹ்மத் அல்-சரே, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உட்பட 20-க்கும் மேற்பட்ட நாட்டுத் தலைவர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்துத் துருக்கி, எகிப்து, பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இங்குத் தனிப்பட்ட முறையில் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளனர்.

