இங்கிலாந்தில் நிரந்தரக் குடியுரிமை பெற ‘குடும்ப வன்முறை’ நாடகம்

இங்கிலாந்தில் நிரந்தரக் குடியுரிமை பெற ‘குடும்ப வன்முறை’ நாடகம்: பிபிசி ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

இங்கிலாந்தில் நிரந்தரமாகத் தங்குவதற்காக, புலம்பெயர்ந்தோர் பலர் தாங்கள் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டதாகப் பொய்க் காரணங்களைக் கூறி, சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி வருவது பிபிசி (BBC) ஊடகத்தின் சமீபத்திய ஆய்வில் அம்பலமாகியுள்ளது.

 

இங்கிலாந்து உள்துறை அமைச்சக விதிகளின்படி, இங்கிலாந்து குடிமக்களைத் திருமணம் செய்துகொண்டு தற்காலிக விசாவில் வசிக்கும் வெளிநாட்டவர்கள், தங்கள் துணையால் ‘குடும்ப வன்முறைக்கு’ ஆளானால் ஒரு சிறப்புச் சலுகையைக் கோர முடியும்.

 

இந்தச் சலுகை கிடைத்தால், அவர்கள் இங்கிலாந்தில் தொடர்ந்து 3 மாதங்கள் தங்க அனுமதிக்கப்படுவார்கள்; அரசின் உதவித்தொகைகளும் கிடைக்கும். மிக முக்கியமாக, இந்த 3 மாத காலத்திற்குள் அவர்கள் இங்கிலாந்தின் நிரந்தரக் குடியுரிமைக்கும் (Permanent Residency) விண்ணப்பிக்கலாம்.

 

வழக்கமாக இங்கிலாந்தில் வேலை பார்க்கும் விசாவில் உள்ளவர்கள், நிரந்தரக் குடியுரிமை பெறக் குறைந்தது 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். ஆனால், இந்த வன்முறைத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தினால் மிக எளிதாகக் குடியுரிமை பெற்றுவிடலாம் என்பதால், பலர் இந்தச் குறுக்குவழியைக் கையில் எடுத்துள்ளனர்.

 

அரசின் போதிய கண்காணிப்பு இல்லாததாலும், மிகக் குறைவான ஆதாரங்களே போதுமானது என்பதாலும் இந்த மோசடி அதிகரித்துள்ளது.

 

கடந்த மூன்று ஆண்டுகளில் இத்தகைய சலுகை கோரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை 50% மேல் அதிகரித்துள்ளது.

 

செப்டம்பர் 2025-க்கு முந்தைய ஓராண்டில் மட்டும் 5,596 பேர் குடும்ப வன்முறையைக் காரணமாகக் காட்டி விண்ணப்பித்துள்ளனர்.

 

இதில் வியக்கத்தக்க வகையில் 1,424 பேர் ஆண்கள் (இது முந்தைய ஆண்டுகளை விட 66% அதிகமாகும்). பெண்களின் விண்ணப்பங்கள் 47% அதிகரித்துள்ளன.

 

உண்மையாகவே பாதிக்கப்பட்டு, வீட்டை விட்டு வெளியேறும் பெண்களுக்கு உதவ உருவாக்கப்பட்ட சட்டத்தை, பல மோசடிப் பேர்வழிகள் தவறாகப் பயன்படுத்துவது அரசை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

 

இது குறித்து இங்கிலாந்து அமைச்சர் ஜெஸ் பிலிப்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “உண்மையாகப் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் இந்தச் சட்டத்தை, மோசடிக்குப் பயன்படுத்துவது மிகவும் வெட்கக்கேடானது. பிரிட்டன் மக்களை ஏமாற்றி இங்குத் தங்க நினைப்பவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, அவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள்” என்று அவர் எச்சரித்துள்ளார்.

 

மேலும், “இந்த மோசடிக்கு உடந்தையாக இருக்கும் போலி வழக்கறிஞர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். அவர்களின் சட்டவிரோதப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, குற்றங்களைத் தடுக்கவே பயன்படுத்தப்படும்” எனவும் அவர் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin