“சந்திரகுமார் அணியுடன் தேர்தல் அரசியலில் பயணிக்க முடியாது”:

“சந்திரகுமார் அணியுடன் தேர்தல் அரசியலில் பயணிக்க முடியாது”: சிவஞானம் சிறீதரன் அதிரடி!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், சந்திரகுமார் தலைமையிலான அணியினருடன் இணைந்து தேர்தல் அரசியலில் ஒருபோதும் பயணிக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

 

யாழ்ப்பாணத்தில் நேற்று (2026 ஏப்ரல் 15, புதன்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை வெளிப்படையாகக் கூறினார். கிளிநொச்சி மாவட்ட அரசியல் சூழலில் இத்தகைய இணைவு எக்காலத்திலும் சாத்தியப்படாது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

 

தேசத்தையும் மக்களையும் காட்டிக்கொடுத்து சின்னாபின்னமாக்குவதில் அரசாங்கத்துடன் கைகோர்த்திருந்தவர்கள், தற்போது தேர்தல் வெற்றிக்காகத் தமிழ் தேசியம் பேசுவதை அனுமதிக்க முடியாது எனச் சாடினார்.

 

யாழ்ப்பாணத்தில் மற்றவர்கள் யாராவது அவர்களுடன் இணைந்து செயற்பட்டால் அது அவர்களைப் பொறுத்தது; ஆனால் கிளிநொச்சியில் அவர்களுடன் இணைந்து எந்தவொரு தேர்தலையும் சந்திக்கும் சூழ்நிலை இருக்காது எனத் தெரிவித்தார்.

 

சந்திரகுமார் அணியுடன் பயணிக்க முடியாது என்பதைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலும், கட்சித் தலைவரிடமும் ஏற்கனவே தெளிவாகத் தெரிவித்துவிட்டதாகக் குறிப்பிட்டார்.

 

ஏற்கனவே ‘சிறிரெலோ’ அமைப்பைக் கட்சியுடன் இணைத்தபோதும் அதன் ஆபத்து குறித்துச் சுட்டிக்காட்டியதாகக் கூறிய அவர், தற்போது அதன் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளமை கட்சிக்குப் பெரும் இழுக்கைத் தந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

 

கடந்த கால விமர்சனம்: “இறந்தவர்கள் அனைவரும் புலிகள்” என்று கூறி ஊர்வலம் நடத்தியவர்களும், பாடசாலை அதிபர்களை வலுக்கட்டாயமாக இடமாற்றம் செய்தவர்களும் இன்று தமிழ் தேசியம் பேசுவதை மக்கள் தீர்மானிக்கட்டும் எனச் சவால் விடுத்தார்.

Recommended For You

About the Author: admin