ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்! – அமெரிக்காவிற்குச் சவூதி அரேபியா கடும் அழுத்தம்
ஹார்முஸ் நீரிணை மீதான தனது இராணுவ முற்றுகையை முடிவுக்குக் கொண்டு வந்து, ஈரானுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்குமாறு அமெரிக்காவைச் சவூதி அரேபியா வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ வெளியிட்டுள்ள செய்தியில், ஹார்முஸ் முடக்கத்தால் செங்கடல் போக்குவரத்து மற்றும் சவூதி எண்ணெய் ஏற்றுமதிக்குக் கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ரியாத் கவலை தெரிவித்துள்ளது.
ஈரானின் தூண்டுதலால் ஹவுத்திகள் பாப் அல் மண்டேப் நீரிணையை மூடினால், சவூதியின் கடல்வழிப் போக்குவரத்து முழுமையாக முடங்கும் எனச் சவூதி வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.
இதனிடையே, மத்திய கிழக்கில் நீடிக்கும் இந்தப் போரினால் உலகப் பொருளாதார வளர்ச்சி 40 சதவீதத்தால் வீழ்ச்சியடையும் என உலக வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் இந்தர்மித் கில் எச்சரித்துள்ளார்.
உலகளாவிய பணவீக்கம் 4.7 சதவீதம் வரை உயரக்கூடும் என்றும், இந்தப் போர் ஆகஸ்ட் மாதம் வரை நீடித்தால் ஏழை நாடுகளில் பாரிய அளவில் பட்டினிச் சாவு ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உரத் தட்டுப்பாட்டினால் உணவுத் தானிய உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், உலகம் ஒரு பேராபத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

