ஈரானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மீதான தாக்குதலில் படுகாயம் – அவ மனைவி உயிரிழப்பு!
ஈரானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், அந்நாட்டின் மூலோபாய வெளியுறவுக் குழுவின் தலைவருமான கமல் கராசி (Kamal Kharazi) , தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார்.
ஏப்ரல் 1, 2026 அன்று இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் அவரது மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அல் ஜசீரா மற்றும் ஈரானிய ஊடகங்களான ஷார்க் (Shargh), எத்தேமாட் (Etemad) ஆகியன உறுதிப்படுத்தியுள்ளன.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் வான்வழித் தாக்குதல்களின் ஐந்தாவது வாரத்தில், தெஹ்ரானின் அஜுரானியே (Ajouraniyeh) பகுதியில் அமைந்துள்ள கராசியின் இல்லம் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. 81 வயதான கமல் கராசி தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதல் அவரை நேரடியாகக் குறிவைத்து நடத்தப்பட்டதா அல்லது அருகில் உள்ள வேறு இலக்குகளின் பாதிப்பால் ஏற்பட்டதா என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.
ஈரானின் உச்சத் தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனியின் மறைவைத் தொடர்ந்து, ஈரானில் நிலவி வரும் கடும் பதற்றங்களுக்கு மத்தியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஈரானிய இராணுவத் தரப்பு இந்தத் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகப் பதிலடித் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படும் எனவும் எச்சரித்துள்ளது. அதேவேளை, தெஹ்ரான், இஸ்ஃபஹான் மற்றும் ஷிராஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வான்வழித் தாக்குதல்கள் இன்றும் (ஏப்ரல் 2) தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

