கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட இடைக்காலப் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்ததைத் தொடர்ந்து, ஈரான் மீதான தனது இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.
ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கரையோரப் பகுதிகளை மையமாகக் கொண்டு, அமெரிக்காவின் கடற்படை முடக்கத்தை மீண்டும் அமுல்படுத்துவதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை ஜூலை 14 ஆம் திகதி மாலை 4 மணி முதல் (அமெரிக்க நேரம்) அமுலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக மத்திய கிழக்குக் கடல் பிராந்தியத்தில் 20க்கும் மேற்பட்ட அமெரிக்கப் போர்க்கப்பல்களும், நூற்றுக்கணக்கான போர் விமானங்களும் களமிறக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஹோர்முஸ் நீரிணை ஊடாகச் செல்லும் வணிகக் கப்பல்கள் மீதான ஈரானின் தாக்குதல் திறன்களை வலுவிழக்கச் செய்யும் நோக்கில், அமெரிக்கா ஈரானின் தென்பகுதிகளில் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்கிறது.
அமெரிக்காவின் தாக்குதல்கள் காரணமாக, ஈரானின் தெற்குத் துறைமுக நகரங்களான பண்டர் அப்பாஸ் (Bandar Abbas), சிரிக் (Sirik) மற்றும் கேஷ்ம் (Qeshm) தீவு ஆகிய பகுதிகளில் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக, அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக, குவைட் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
“அமெரிக்காவின் இத்தகைய விரோதப் போக்குகள் தொடருமானால், இந்த பகுதியிலிருந்து ஒரு துளி எண்ணெய் அல்லது எரிவாயு கூட ஏற்றுமதி செய்யப்படாது என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை கடுமையாக எச்சரித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானைத் தவிர மற்ற அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் இந்த நீரிணை திறந்திருக்கும் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கப்பல்களிடம் 20% வரி வசூலிக்கும் திட்டத்தை முன்வைத்த அவர், தற்போது அதற்குப் பதிலாக வளைகுடா நாடுகளுடன் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளவிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மோதல்கள் காரணமாக உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலையில் மீண்டும் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

