திறமையான தொழில் வல்லுநர்களுக்கு வெறும் 3 ஆண்டுகளில் நிரந்தர குடியுரிமை தென் கொரியா, உலகெங்கிலும் உள்ள திறமையான விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை ஈர்க்கும் வகையில் தனது டாப் டயர் விசா திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது.
2025ஆம் ஆண்டிலேயே மூத்த பொறியாளர்களுக்கு வழங்கப்பட்ட இந்த வாய்ப்பு, தற்போது நீதி அமைச்சகத்தின் மூலம் செயற்கை நுண்ணறிவு, குறைக்கடத்திகள் மற்றும் உயிரித் தொழில்நுட்பம் துறைகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நீண்ட கால ‘F2’ அந்தஸ்து, குடும்பத்தினருக்கான சலுகைகள் மற்றும் நிரந்தரக் குடியுரிமை பெறுவதற்கான தெளிவான பாதையைப் பெறுவார்கள்.
குறிப்பாக AI, செமிகண்டக்டர் மற்றும் பயோடெக் துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
தென் கொரியா உலகின் மிகக் குறைந்த கருவுறுதல் விகிதம் மற்றும் வேகமாக வயதாகி வரும் மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது.
இந்தச் சவாலை எதிர்கொள்ளவே அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
2030-ஆம் ஆண்டிற்குள் சுமார் 2,000 அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை வரவேற்க தென் கொரிய அரசு திட்டமிட்டுள்ளது.
புதிய வாழ்க்கையைத் தொடங்க விரும்பும் ஒரு ஆராய்ச்சியாளருக்கு, வெறும் மூன்றே ஆண்டுகளில் நிரந்தரமான ஒரு இடத்தைப் பெறுவது என்பது வாழ்க்கையையே மாற்றக்கூடிய ஒரு வாய்ப்பாக அமையும்.

