தாய்லாந்தில் கண்டறியப்பட்ட புதிய வகை டைனோசர்

தாய்லாந்தின் கலாசின் மாகாணத்தில் உள்ள ‘பூ நொய்’ (Phu Noi) பகுதியில், சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த புதிய வகை டைனோசரின் புதைபடிவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

சுராகசாரஸ் கலாசிநென்சிஸ்’ (Surasaurus kalasinensis) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த டைனோசர், தாவர உண்ணி வகையைச் சேர்ந்தது.

இதன் கழுத்து சுமார் 65 அடி நீளம் கொண்டது. இது ஒரு கிரிக்கெட் பிட்ச் (Cricket pitch) அளவிற்கு இணையானது. நீண்ட கழுத்தின் உதவியுடன், உயரமான மரங்களின் கிளைகளை எளிதாக உண்டு இவை வாழ்ந்துள்ளன.

பொதுவாக இதுபோன்ற டைனோசர்களுக்கு 13 முதல் 15 கழுத்து எலும்புகள் இருக்கும் நிலையில், இதற்கு 17 முதல் 19 எலும்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் ‘Y’ வடிவ எலும்பு அமைப்பு, மற்ற டைனோசர்களிடமிருந்து இதைத் தனித்துவமாகக் காட்டுகிறது.

முன்பு சீனாவில் மட்டும் கண்டறியப்பட்ட இந்த இனம், தென்கிழக்கு ஆசியாவிலும் வாழ்ந்திருப்பதை தற்போதைய ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பு, கடந்த மே மாதத்தில் தாய்லாந்தில் கண்டெடுக்கப்பட்ட ‘நாகாடைட்டன்’ என்ற டைனோசர், 27 டன் எடை மற்றும் 27 மீட்டர் நீளத்தை கொண்டிருந்தது.

இது 9 ஆசிய யானைகளின் எடைக்குச் சமமானதாகும். தாய்லாந்தில் கண்டறியப்பட்ட 14-வது டைனோசர் இனமான இதற்கு, தற்போது பெங்கொக் அருங்காட்சியகத்தில் முழு வடிவம் கொடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தொடர் கண்டுபிடிப்புகள், வரலாற்றுக்கு முந்திய கால விலங்கினங்கள் மற்றும் அவற்றின் வாழ்விடங்கள் குறித்த புதிய பரிமாணங்களை ஆய்வாளர்களுக்குத் திறந்துவிட்டுள்ளன.

Recommended For You

About the Author: admin