பேத்தூன் (Béthune) நகரில் வாடகை குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட பெண்

பேத்தூன் (Béthune) நகரில் வாடகை குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட பெண்: திட்டமிட்ட கொலை (Homicide volontaire) வழக்காகப் பதிவு செய்து தீவிர விசாரணை!

பா-து -கலே (Pas-de-Calais) மாகாணம், பேத்தூன்(Béthune) நகரில் இணையத்தளம் வழியாக வாடகைக்கு விடப்பட்ட ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் (Appartement), நேற்று (திங்கட்கிழமை, ஜூலை 13) பெண் ஒருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தக் குடியிருப்பின் உரிமையாளரே சடலத்தைக் கண்டுபிடித்துக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தடயவியல் மருத்துவரின் (Médecin légiste) முதற்கட்ட ஆய்வில், அப்பெண் கூர்மையான ஆயுதத்தால் (Arme blanche) தாக்கப்பட்டுப் பலத்த காயமடைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

காயங்களின் தீவிரத் தன்மையைக் கருத்தில் கொண்டு, இந்தச் சம்பவத்தை ‘திட்டமிட்ட கொலை’ (Homicide volontaire) வழக்காகப் பதிவு செய்து அரசு வழக்கறிஞர் அலுவலகம் (Parquet) விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.

கொல்லப்பட்ட பெண் யார் என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை. வரவிருக்கும் உடற்கூறாய்வின் (Autopsie) முடிவிலேயே மரணத்திற்கான துல்லியமான காரணங்களும், கொலை செய்யப்பட்ட முறையும் முழுமையாகத் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மர்மக் கொலை தொடர்பான முழுமையான விசாரணைப் பொறுப்பும், பா-து -கலே (Pas-de-Calais) மாகாணத்தின் ‘நீதித்துறை காவல் துறையின் மாவட்டங்களுக்கிடையேயான சேவைப் பிரிவிடம்’ (Service interdépartemental de la police judiciaire – SIPJ) ஒப்படைக்கப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: admin