ஈரானுக்குள் ஊடுருவிய 170-க்கும் மேற்பட்ட உளவாளிகள் சிக்கினர்! இஸ்ரேலுக்கு ரகசியத் தகவல் அனுப்பியதாகக் குற்றச்சாட்டு
ஈரான் மீதான போர் தொடங்கியதிலிருந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்காகப் பணியாற்றியதாகக் கூறப்படும் 178 உளவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படை (IRGC) தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள், ஈரானிய செஞ்சிலுவைச் சங்க மையங்கள் மற்றும் இராணுவச் சோதனைச் சாவடிகளைப் புகைப்படம் எடுத்து, அவற்றின் இருப்பிடங்களை அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவு நிறுவனங்களுக்குத் தாக்குதல் நடத்துவதற்காக அனுப்பி வைத்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து நவீன ரக ஆயுதங்கள், இருப்பிடத்தைக் கண்டறியும் ஜிபிஎஸ் (GPS) கருவிகள், அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் கட்டுக்கட்டாக வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்தக் கைது நடவடிக்கையின் போது ஈரானியர்கள் மட்டுமன்றி, பல வெளிநாட்டினரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மெஹர் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி 28 முதல் நீடிக்கும் இந்தப் போரில், ஈரானின் முக்கிய இராணுவத் தலைவர்களின் நடமாட்டங்களைக் கண்காணித்து வந்த ஒரு பாரிய உளவுத்துறை வலையமைப்பையே தாம் முறியடித்துள்ளதாக IRGC பெருமிதம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஈரானின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன.

