ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை எதிரொலி: 22 கப்பல்கள் இந்தியாவுக்கு வருகிறது..
அடுத்த 72 மணிநேரத்தில் 22 சரக்கு கப்பல்களைக் கையாள தயாராக இருப்பதாக குஜராத்தின் துறைமுக ஆணையம் அறிவித்துள்ளது.
எரிபொருள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும், கப்பல் போக்குவரத்தை முறைப்படுத்தவும் பணியாளர்கள் அவசரகால அடிப்படையில் செயல்பட்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஈரான் அதிபருடன் பேசிய நிலையில், இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி போக்குவரத்தை உறுதி செய்வது இந்தியாவின் முதன்மை இலக்காக உள்ளது.
ஏற்கனவே ஹார்மோஸ் நீரிணையில் தாய்லாந்து கப்பல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், சவுதி அரேபியாவிலிருந்து கச்சா எண்ணெய்யுடன் மும்பை வந்தடைந்த ‘ஷென்லாங்’ கப்பல், கண்காணிப்புத் தொழில்நுட்பத்தை அணைத்துவிட்டுப் பாதுகாப்பாக நீரிணையைக் கடந்துள்ளது.
ஈரானில் உள்ள சுமார் 9,000 இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிக்கப்படாமல் இருக்கத் துறைமுக மேலாண்மை அமைப்புகள் தற்போது முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன

