ஹார்முஸ் ஜலசந்தி மூடல்: ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கு பாயும் கச்சா எண்ணெய்

ஹார்முஸ் ஜலசந்தி மூடல்: ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கு பாயும் கச்சா எண்ணெய் – 50% இறக்குமதி உயர்வு

ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான இடையூறு காரணமாக மேற்கு ஆசியாவிலிருந்து கச்சா எண்ணெய் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

 

இதனால், மார்ச் மாதத்தின் முதல் 11 நாட்களில் இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி கணிசமாக அதிகரித்துள்ளதாக வர்த்தக வட்டாரங்கள் மற்றும் டேங்கர் தரவுகள் தெரிவிக்கின்றன.

 

பிப்ரவரி 28- அன்று மேற்கு ஆசிய மோதல் தொடங்குவதற்கு முன்பு, மாஸ்கோவிலிருந்து டெல்லியின் எண்ணெய் இறக்குமதி நாளொன்றுக்கு 8 லட்சம் முதல் 10 லட்சம் பேரல்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது 12-வது நாளை எட்டியுள்ள இந்த மோதலால், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கடல்வழி போக்குவரத்து முடங்கியுள்ளது. இதன் விளைவாக, இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி இந்த மாதத்தின் முதல் 11 நாட்களில் 1.5 மில்லியன் பேரல்களாக உயர்ந்துள்ளது.

 

மேற்கு ஆசிய எண்ணெய் விநியோகம் விரைவில் சீராகாவிட்டால், இந்த இறக்குமதி அளவு மேலும் அதிகரிக்கக்கூடும். இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் பாதியளவு (2.5-2.7 மில்லியன் பேரல்கள்) சமீபத்திய மாதங்களில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வந்துள்ளது; இதன் நீண்டகால சராசரி 40% ஆகும். இந்த எண்ணெய் முக்கியமாக ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத்தில் இருந்து பெறப்படுகிறது.

 

கெப்லர் நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சி ஆய்வாளர் சுமித் ரிடோலியா கூறுகையில், “தற்போதைய ஏற்றுமதி அட்டவணைகள் தொடர்ந்தால், இந்த முழு மாதத்திற்கான ரஷ்ய கச்சா எண்ணெய் வருகை நாளொன்றுக்கு 2 மில்லியன் பேரல்களை எட்டக்கூடும் அல்லது அதைத் தாண்டக்கூடும்” என்றார்.

 

கடல்வழி கண்காணிப்பு தரவுகளின்படி, ஏராளமான ரஷ்ய கச்சா எண்ணெய் சரக்குகள் தற்போது இந்தியப் பெருங்கடல் வழியாக இந்தியத் துறைமுகங்களை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன. மார்ச் தொடக்கத்தில் சுமார் 130 மில்லியன் பேரல் ரஷ்ய கச்சா எண்ணெய் கப்பல்களில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

 

அமெரிக்காவின் நிலைப்பாடு

 

முன்னதாக, அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் காரணமாக இந்தியா ரஷ்ய எண்ணெயைக் குறைத்திருந்தது. ஆனால் இப்போது ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால், இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்குவதை அமெரிக்க ஏற்றுக்கொண்டுள்ளது. கடந்த வாரம், கடலில் உள்ள டேங்கர்களில் ஏற்கனவே இருக்கும் ரஷ்ய கச்சா எண்ணெயை இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் வாங்குவதற்கு அமெரிக்கா 30 நாள் தற்காலிக “விலக்கு” அளித்தது.

 

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, சர்வதேச எண்ணெய் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இது பார்க்கப்படுகிறது.

 

இது குறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் கூறுகையில், “உலகளாவிய எண்ணெய் விலையை சீராக வைத்திருப்பதில் இந்தியா ஒரு சிறந்த பங்காளியாக உள்ளது. சந்தை ஸ்திரத்தன்மைக்காக அமெரிக்காவும் இந்தியாவும் கைகோர்த்து செயல்படுவது அவசியம்” என்றார்.

 

இந்தியாவின் இருப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்

 

இந்தியாவில் 6 முதல் 8 வாரங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் இருப்பு உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேற்கு ஆசியா அல்லாத பிற பிராந்தியங்களில் இருந்து விநியோகத்தை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விட்டோல் (Vitol), டிராஃபிகுரா (Trafigura) மற்றும் ஏடிஎன்ஓசி (ADNOC) போன்ற பெரிய வர்த்தக நிறுவனங்களுடன் இந்தியா தொடர்பில் உள்ளது.

 

மேலும், இப்பகுதியில் உள்ள 28 இந்தியக் கொடி ஏந்திய கப்பல்கள் மற்றும் அவற்றில் உள்ள 778 இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை கப்பல் போக்குவரத்து அமைச்சகம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.

Recommended For You

About the Author: admin