எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா – இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா?
ஈரான் போர் காரணமாக வங்கதேசத்தில் கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் பங்க்குகளில் கூட்டம் அலைமோதி வருகிறது.
இப்படியான சூழலில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்தியாவிடம் உதவி கேட்டு வங்கதேசம் கெஞ்ச தொடங்கி உள்ளது. இதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
நம் நாட்டை போல் வங்கதேசமும் மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து தான் கச்சா எண்ணெய், கேஸ் வாங்கி பயன்படுத்தி வருகிறது. வங்கதேசத்துக்கும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் கச்சா எண்ணெய், கேஸ் உள்ளிட்டவை செல்லும். தற்போது போரை காரணம் காட்டி ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடி உள்ளது.
இதனால் இந்தியா, சீனா, வங்கதேசம் உள்பட பிற நம்முடைய அண்டை நாடுகளுக்கான கச்சா எண்ணெய், கேஸ் சப்ளை பாதிக்கப்பட்டது. தற்போது ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க நம் நாட்டுக்கு வரும் கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் நம் நாட்டில் விரைவில் கச்சா எண்ணெய், கேஸ் தட்டுப்பாட்டுக்கு தீர்வு கிடைக்க உள்ளது.
வங்கதேசத்தில் தட்டுப்பாடு
ஆனால் வங்கதேசம் சிக்கி கொண்டது. வங்கதேசத்தை எடுத்து கொண்டால் அரபு நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய், எல்பிஜி கேஸ், எல்என்ஜி கேஸ் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்கிறது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளாதல் வங்கதேசத்துக்கான சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கதேசம் பெரிய பாதிப்பை எதிர்கொள்கிறது. பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும் வங்கதேசத்துக்கு இது புதிய பிரச்சனையாக மாறி உள்ளது.
இந்தியாவிடம் கெஞ்சல்
இதனால் வங்கதேசம் நம் நாட்டிடம் உதவி கோரியது. வாகனங்களுக்கான எரிபொருட்கள் இந்தியா – வங்கதேசம் இடையேயான குழாய் வழியாக வழங்க கோரியது. இதையடுத்து நம் நாடு வங்கதேசத்துக்கு உதவி செய்துள்ளது. முதற்கட்டமாக 5 ஆயிரம் டன் டீசல் வங்கதேசத்துக்கு நம் நாடு வழங்கி உள்ளது. ஆனாலும் வங்கதேசத்தில் டீசல் தட்டுப்பாடு சரியாகவில்லை. இதனால் கூடுதலாக பெட்ரோல், டீசல் வழங்கும்படி வங்கதேசம் நம் நாட்டிடம் கெஞ்சி உள்ளது.
ரஷ்யாவிடம் வாங்க முடிவு
அதேபோல் பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடிவு செய்துள்ளது. ஆனால் உக்ரைன் மீதான போரால் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மேலும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு டிரம்ப் வரிகளை விதித்தார். இதனால் பல நாடுகளும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியது. இதனால் வங்கதேசம் நேரடியாக ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க தயங்குகிறது.
அமெரிக்காவை நாடிய வங்கதேசம்
இதனால் வங்கதேசத்தின் நிதி அமைச்சர் அமீர் கோஸ்ரூ முகமது சவுத்ரி நேற்று அந்த நாட்டுக்கான அமெரிக்க தூதர் பிரண்ட் டி கிறிஸ்டென்சனை சந்தித்து பேசினார். அப்போது ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க வங்கதேசத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
தற்போது ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் தொடுத்து வருகிறது. இதனால் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடி உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து வங்கதேசத்துக்கு கிடைக்க வேண்டிய கச்சா எண்ணெய் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க அனுமதிக்கும்படி வங்கதேசம் அமெரிக்காவிடம் கோரிக்கை வைத்துள்ளது.

