புதிய பயிற்சியாளரை நியமித்த CSK.. நிர்வாகம் அதிரடி! ரெய்னா இல்லை
2026 ஐபிஎல் தொடர் இம்மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும். இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய ஃபில்டிங் பயிற்சியாளரை நியமித்துள்ளது. முன்னதாக சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சென்னை அணி நிர்வாகம் ஜேம்ஸ் ஃபாஸ்டர் என்ற ஒருவரை நியமித்துள்ளது.
சிஎஸ்கே ஃபில்டிங் பயிற்சியாளராக ஜேம்ஸ் ஃபாஸ்டர் நியமனம்
ஜேம்ஸ் ஃபாஸ்டர் முன்னாள் இங்கிலாந்து வீரர் ஆவார். இவர் அந்நாட்டு அணிக்காக 2001ஆம் ஆண்டு முதல் 2009ஆண்டு வரை விளையாடி உள்ளார். இவர் சர்வதேச அளவில் 7 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 11 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். ஜேம்ஸ் ஃபாஸ்டரை நியமித்தது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் அறிவிப்பை வெளியிட்டார். அவர் கூறுவகையில், நாங்கள் ஒரு சிறந்த ஃபில்டிங் பயிற்சியாளர் தேடி வந்தோம். ஜேம்ஸ் ஃபாஸ்டர் எங்களுக்கு கிடைத்துள்ளார். அவர் சிஎஸ்கேவில் இணைவார் என தெரிவித்தார்.
ஜேம்ஸ் ஃபாஸ்டர் அனுபவம்
45 வயதாகும் ஜேம்ஸ் ஃபாஸ்டர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஃபில்டிங் பயிற்சி கொடுத்துள்ளார். 2020ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் கேகேஆர் அணிக்காக ஃபில்டிங் பயிற்சி கொடுத்துள்ளார். அதேபோல் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பெஷாவர் ஸல்மி அணியின் தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றி இருக்கிறார். மேலும், 2022ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.
முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்குதான் இந்த பொறுப்பு வழங்கப்படும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிர்வாகம் சிந்தனை வேறாக இருந்துள்ளது.
பயிற்சியை தொடங்கிய சிஎஸ்கே வீரர்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தற்போது வரும் 2026 ஐபிஎல் சீசனுக்காக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். தோனி, ஆயூஷ் மாத்ரே, ருதுராஜ் கெய்கவாட், பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மா உள்ளிட்ட சிஎஸ்கே அணி வீரர்கள் பயிற்சி முகாமிற்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக வருகை தந்து பயிற்சியை தொடங்கி உள்ளனர். இன்னும் சஞ்சு சாம்சன், சிவம் துபே ஆகியோர் இணையவில்லை. அவர்கள் நடந்து வரும் டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்ததும் பயிற்சி முகாவில் இணைவார்கள்.
கம்பேக் கொடுக்குமா சிஎஸ்கே
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎலில் இதுவரை 5 கோப்பையை கைபற்றி உள்ளது. ஆனால் கடந்த சீசனில் மிகவும் மோசமாக விளையாடி முதல் அணியாக தொடரை விட்டு வெளியேறியது. இதனால் வரும் 2026 ஐபிஎல் சீசனில் கம்பேக் கொடுக்க வேண்டும் என சென்னை அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மேலும், இதற்காக நடந்து முடிந்த மினி ஏலத்தின் மூலம் சென்னை அணி தங்களது அணியை முற்றிலுமாக மாற்றி உள்ளனர். அணியின் தூணாக விளங்கிய ஜடேஜாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கொடுத்துவிட்டு சஞ்சு சாம்சனை வாங்கினர். அதேபோல் உள்ளூர் வீரர்களான கார்த்திக் சர்மா மற்றும் பிரசாந்த் வீரை ரூ. 14 கோடிக்கு எடுத்து அதிர்ச்சி அளித்தது. இதன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பு உள்ளது.

