கூட்டணியில் 12 தொகுதிகளை கேட்ட மநீம! திமுக கொடுத்த பதில்
தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 12 தொகுதிகள் கேட்ட நிலையில் திமுக 2 தொகுதிகளை ஒதுக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் அருணாச்சலம் தலைமையிலான குழுவினருடன் திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், திமுக தரப்பில் பொருளாளர் டி.ஆர். பாலு, அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ. வேலு உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
அப்போது, மக்கள் நீதி மய்யம் தரப்பில் 12 தொகுதிகள் ஒதுக்க கோரியதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய திமுக, அதிகபட்சமாக 2 சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்குவதாக கூறியதாக கூறப்படுகிறது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அருணாச்சலம், திமுக கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யம் எப்படி பலம் சேர்க்கப் போகிறது என்பதை விவரித்ததாக கூறினார். இதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சி மாநிலத் தலைவர் வசீகரன் தலைமையிலான குழுவினருடன், திமுக தொகுதி பங்கீட்டு குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

