நிதிஷ் குமார் திடீர் ராஜினாமா? ராஜ்யசபா எம்பியாக முடிவு.. பீகார் முதல்வர் பதவியை கைப்பற்றும் பாஜக
பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் – பாஜகவின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார்.
இந்நிலையில் தான் நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ராஜ்யசபா எம்பி தேர்தலில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தனது மகனின் அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நிதிஷ்குமார் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
பீகாரில் 2025 நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 123 இடங்களில் வென்றால் தனித்து ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
அதேவேளையில் பாஜக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. பாஜக தனிப்பெரும் கட்சியாக மாறியது.
பாஜக கூட்டணியில் பாஜக 89 தொகுதிகளிலும், முதல்வர் நிதிஷ் குமாரின் ஜேடியூ எனும் ஐக்கிய ஜனதாதளம் கட்சி 85 தொகுதிகளிலும், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் எல்ஜேபிஆர்வி கட்சி எனும் லோக்ஜன்சக்தி கட்சி (ராம்விலாஸ்) கட்சி 19 தொகுதிகளிலும், மத்திய அமைச்சர் ஜிதன்ராம் மஞ்சியின் எச்ஏஎம்எஸ் எனும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (செக்குலர்) கட்சி 5 தொகுதிகளிலும், உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா (ஆர்எஸ்எச்டிஎல்கேஎம்) கட்சி 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. மொத்தமாக பாஜக கூட்டணி 202 இடங்களை கைப்பற்றியது.
எதிர்க்கட்சிகளான தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி கட்சி 25 தொகுதகிளிலும், காஙகிரஸ் 9 இடங்களிலும், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதையடுத்து மீண்டும் பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தது. மீண்டும் ஜேடியூ கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் முதல்வரானார்.
இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பீகாரில் 5 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜக சார்பில் தேசிய தலைவர் நிதின் நபின், சிவேஷ் குமார் ஆகியோர் வேட்பாளர்காக அறிவித்துள்ளனர். அதேபோல் நிதிஷ் குமார் கட்சி சார்பில் 2 பேர் வேட்பாளராக போட்டியிட உள்ளனர்.
அதன்படி நிதிஷ் குமார் மற்றும் ராம்நாத் தாகூர் ஆகியோர் வேட்பாளராக களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நிதிஷ் குமார் தற்போது மாநில முதல்வராக உள்ளார். அவருக்கு 75 வயது ஆகிறது. இதனால் அவர் மாநில அரசியலை விட்டு தேசிய அரசியலை விரும்புவதாக கூறப்படுகிறது. மேலும் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு நாளையுடன் முடிவுக்கு வர உள்ளது.
தற்போது நிதிஷ் குமார் ராஜ்யசபா வேட்பாளராக போட்டியிடுவதற்கான வேட்புமனு தயாராக உள்ளதாம். இந்த மனுவில் நிதிஷ் குமார் கையழுத்திட்டால் மட்டுமே போதும். இதுதொடர்பாக ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் செயல் தலைவர் சஞ்சய் ஜா உடன் நிதிஷ் குமார் சுமார் 3 மணிநேரம் விவாதித்துள்ளனர். அப்போது இருவரும் ராஜ்யசபா தேர்தல் தொடர்பாக விவதித்தனர். இதனால் நிச்சயம் நிதிஷ் குமார் ராஜ்யசபா எம்பி தேர்தலுக்காக நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
ஒருவேளை ராஜ்யசபா தேர்தலில் நிதிஷ் குமார் போட்டியிட்டால் நிச்சயம் அவர் வெற்றி பெறுவார். அப்படியென்றால் அவரால் முதல்வராக நீடிக்க முடியாது. அவர் கண்டிப்பாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அந்த வகையில் பார்த்தால் பாஜகவை சேர்ந்த ஒருவர் முதல்வராக பதவியேற்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது பாஜகவுக்கு 89 எம்எல்ஏக்கள் உள்ளன.
கடந்த முறை குறைந்த எம்எல்ஏக்களை வைத்து கொண்டு முதல்வர் பதவியை பாஜக, நிதிஷ் குமாருக்கு விட்டு கொடுத்தது. அதற்கு கைமாறாக நிதிஷ் குமார் இந்த முறை ஜேடியூவை விட பாஜகவுக்கு 4 எம்எல்ஏக்கள் மட்டுமே அதிகம் இருந்தாலும் கூட பாஜகவுக்கு முதல்வர் பதவியை வழங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் இதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. நிதிஷ் குமாருக்கு தற்போது 75 வயது ஆகிறது. இதனால் தனக்கு பிறகு கட்சியை தனது வாரிசு வழிநடத்த வேண்டும் என்று நிதிஷ் குமார் விரும்புவதாக கூறப்படுகிறது. நிதிஷ் குமாருக்கு , நிஷாந்த் குமார் என்ற மகன் உள்ளார். அவருக்கு வயது 45 வயது ஆகிறது. இவர் தற்போது வரை நேரடியாக அரசியலில் ஈடுபடவில்லை.
ஆனால் தேர்தல் பணிகளை மட்டும் மேற்கொண்டு வருகிறார். கட்சியில் எந்த பொறுப்பிலும் அவர் இல்லை. இருப்பினும் கடந்த ஆண்டு இறுதயிலேயே விரைவில் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் அரசியலில் என்ட்ரி கொடுப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தான் நிஷாந்த் குமாரை பீகாரில் தனது அரசியல் வாரிசாக்க நிதிஷ் குமார் விரும்புகிறார்.
இதனால் நேரடியாக கட்சியில் பொறுப்பு கொடுத்தால் யாரும் மதிக்க மாட்டார்கள். அதேபோல் நேரடியாக அவரை முதல்வராக்கினால் மக்களும், சொந்த கட்சியினரும், கூட்டணியில் உள்ள கட்சியினரும் ஏற்க மாட்டார்கள். இதனால், தான் ராஜ்யசபா எம்பியாகிவிட்டு பாஜகவுக்கு முதல்வர் பதவியை விட்டு கொடுத்து மகன் நிஷாந்த் குமாரை துணை முதல்வராக்க நிதிஷ் குமார் விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

