வளைகுடா வழியை மொத்தமாக மூடிய ஈரான்.. பெட்ரோல் டீசல் விலை உயருமா?

வளைகுடா வழியை மொத்தமாக மூடிய ஈரான்.. பெட்ரோல் டீசல் விலை உயருமா? மத்திய அரசு விளக்கம்

உலக அளவில் எரிபொருள் விநியோகத்தின் இதயம் என்று அழைக்கப்படும் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளது.

அந்த வழியாக சீனாவை தவிர மற்ற கப்பல்களை செல்ல ஈரான் அனுமதிக்க மறுக்கிறது. இதனால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட தொடங்கி உள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இருப்பினும் 2 மாதங்களுக்கு பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு நாட்டில் இருக்காது என மத்திய அரசு கூறியுள்ளது.

 

உலகில் எரிசக்தி பாதையாக ஹார்முஸ் நீரிணை என்ற ஒரு குறுகிய பாதை இருக்கிறது. சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் மற்றும் ஈராக் போன்ற நாடுகள் தங்கள் எண்ணெயை உலக நாடுகளுக்கு அனுப்ப இந்தப் பாதையையே நம்பி உள்ளன. இது பாரசீக வளைகுடாவையும் ஓமன் வளைகுடாவையும் இணைக்கிறது. சுமார் 33 கிலோமீட்டர் அகலம் மட்டுமே கொண்ட இந்த பகுதியில் வடக்குக் கரை முழுவதையும் ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. தற்போது வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால் வளைகுடா நாடுகளில் கப்பல்கள் போக முடியாத நிலை இருக்கிறது.

 

150 கப்பல்கள்

 

இதனால் சவுதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து எரிபொருள் ஏற்றி வந்த 150-க்கும் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முடியாமல் நிற்கின்றன ஹார்முஸ் ஜலசந்தியை மூடி உள்ளதாகவும், ஜலசந்தியை கடக்க முயற்சி செய்யும் கப்பல்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்துவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

 

இந்தியாவிற்கு இறக்குமதி

 

கச்சா எண்ணெய்யில் இருந்து எடுக்கப்படும் பெட்ரோல்-டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு 88 சதவீத இறக்குமதியை நம்பியே இந்தியா உள்ளது. குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக 50 சதவீதத்துக்கும் அதிகமான கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு இறக்குமதி ஆகி வருகிறது.

 

இந்த ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் எண்ணெய் டேங்கர் கப்பல்கள் அங்கு சிக்கிய நிலையில் உலகளவில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்தது. அமெரிக்காவில் எடுக்கப்படும் கச்சா எண்ணெய் விலை, பீப்பாய்க்கு 73 டாலராக உயர்ந்தது. வடக்கு கடலில் எடுக்கப்படும் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 80 டாலர் ஆக இருக்கிறது.

 

எரிபொருள் தட்டுப்பாடு

 

கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு பெட்ரோல்-டீசல் விலை மின்னல் வேகத்தில் உயரும் என கணிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பெட்ரோல்-டீசல் விலை உயராது என மத்திய அமைச்சகம் தகவல் கூறியுள்ளது.

 

2 மாதங்களுக்கு பிரச்சனை இல்லை

 

இதுகுறித்து மத்திய பெட்ரோலியம் அமைச்சகத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், “கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக நாட்டில் பெட்ரோல்-டீசல் விலை உயராது. எரிபொருள் மற்றும் வணிக ரீதியாக தேவையான பெட்ரோல்-டீசல் இருப்பு 2 மாதங்களுக்கு உள்ளது. இதனால் புவிசார் பதற்றம் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் எரிபொருள் பயன்பாட்டை ஒருபோதும் பாதிக்காது” என்று கூறினார்.

 

விலையை உயர்த்தவில்லை

 

இந்தியாவில் கடைசியாக 2022-ம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் சில்லறை விலை மாறியது. அதன்பிறகு விலையில் எந்த மாற்றமுல் இல்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் பல்வேறு தருணங்களில் புவிசார் பதற்றம் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. ஆனால் இந்தியன் ஆயில் (ஐ.ஓ.சி), பாரத் பெட்ரோலியம் (பி.பி.சி.எல்) மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் (எச்.பி.சி.எல்) ஆகிய பொதுத் துறை நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தாமல் உள்ளன.’

 

பெட்ரோல் விலை ஏன் உயராது

 

இதனால் கச்சா எண்ணெய் விலை உயரும்போது இந்நிறுவனங்கள் நஷ்டத்தையும், குறையும்போது லாபத்தையும் ஈட்டி வருகிறது. தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினால் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை விமர்சனம் செய்யும். அதனை மத்திய அரசு கண்டிப்பாக விரும்பாது. எனவே சர்வதேச கச்சா எண்ணெய் விலை அளவுக்கு அதிகமாக உயரும்பட்சத்தில் மட்டுமே பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை மத்திய அரசு பரிசீலிக்க வாய்ப்பு ருப்பதாக கூறப்படுகிறது.

Recommended For You

About the Author: admin