வேளச்சேரி – பரங்கிமலை ரயில் தடத்தில் ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் இன்று ஆய்வு

வேளச்சேரி – பரங்கிமலை ரயில் தடத்தில் ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் இன்று ஆய்வு

சென்னையில் முக்கியமான வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் ஜனக்குமார் கர்க் இன்று (மார்ச் 4) ஆய்வு செய்யவுள்ளார்.

சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் (மேம்பால ரயில்) தடத்தை பரங்கிமலை வரை 5 கி.மீ. தொலைவுக்கு நீட்டிக்கும் வகையில், பறக்கும் ரயில் வழித்தட திட்டப்பணி, 2008-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

ஆனால் ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகரில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினையால் பணிகள் முடங்கின. கடந்த 2022-ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் பணிகள் தொடங்கி, சில மாதங்களுக்கு முன்பாக முடிந்தன.

இதையடுத்து வேளச்சேரி – பரங்கிமலைக்கு கடந்த ஆண்டு நவ.7-ல் 10 பெட்டிகளுடன் சரக்கு ரயிலும், டிச.15-ல் ஒரு சரக்கு ரயிலும் அடுத்தடுத்து இயக்கி சோதிக்கப்பட்டன. இது தொடர்பாக, ரயில்வே பாதுகாப்பு ஆணையருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

பின்னர், அவரின் பரிந்துரைகளை ஏற்று, திருத்தம் செய்து மீண்டும் அறிக்கை அனுப்பப்பட்டது. இதற்கிடையில், வேளச்சேரி – பரங்கிமலை ரயில் வழித்தடத்தில் மார்ச் 10-ம் தேதி மின்சார ரயில் சேவை தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்தது.

இதைத்தொடர்ந்து புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் ஆகிய ரயில் நிலையங்களில் டிக்கெட் வழங்கும் வசதி உட்பட பல்வேறு வசதிகளை ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேளச்சேரி – பரங்கிமலை ரயில் வழித்தடத்தில் ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் ஜனக்குமார் கர்க் நாளை (மார்ச் 5) ஆய்வு செய்யவுள்ளார்.

இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் ஜனக்குமார் கர்க் புதன்கிழமை, புதுடெல்லியிலிருந்து சென்னைக்கு 3 நாட்கள் பயணமாக வருகிறார். சென்னையில் வேளச்சேரி – பரங்கிமலை இடையே ரயில் பாதையை 2 நாட்கள் ஆய்வு செய்கிறார். டிராலி மற்றும் ரயிலில் சோதனை மேற்கொள்ளவுள்ளார்.

அப்போது ரயில் தண்டவாளம், சிக்னல் அமைப்பு, கட்டுமானம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்கிறார். தொடர்ந்து ரயில் நிலையங்களிலும் ஆய்வு செய்கிறார். மார்ச் 5-ம் தேதி பிற்பகல் 1:30 முதல் மாலை 6 மணி வரை அதிவேக சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. மார்ச் 6-ம் தேதி நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்குச் சென்று பார்வையிடுகிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Recommended For You

About the Author: admin