மன்னாரில் அதிர்ச்சி: வீதிகளில் சிதறிக்கிடந்த மனித உடல் பாகங்கள்!

மன்னாரில் அதிர்ச்சி: வீதிகளில் சிதறிக்கிடந்த மனித உடல் பாகங்கள்! எம்பாமிங் நிலையத்திற்கு சீல் வைக்க உத்தரவு!

மன்னார், சௌத்பார் பகுதியில் அமைந்துள்ள தனியார் மனித உடல் பதப்படுத்தும் (Embalming) நிலையத்தில், மனித உடல் பாகங்கள் முறையற்ற விதத்தில் அப்புறப்படுத்தப்பட்டமையால் அப்பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடும் மக்கள் மத்தியில் அச்சமும் ஏற்பட்டுள்ளது.

இன்று (2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை) காலை, குறித்த நிலையத்திற்கு அருகாமையில் மனித உடல் பாகங்கள் சிதறிக்கிடந்ததோடு, அவற்றை நாய்கள் இழுத்துச் சென்ற விபரீதச் சம்பவம் அப்பகுதி மக்களைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நீண்டகாலமாக இந்த நிறுவனம் மனித எச்சங்களைச் சரியாக அப்புறப்படுத்தாமல், குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகிலேயே வீசி வந்துள்ளது.

இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்திச் சிலர் இவ்வாறான சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இராணுவ முகாம் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் உள்ள இடத்தில் இத்தகைய மனிதநேயமற்ற செயல்கள் தொடர்வதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறித்த நிறுவனத்தின் அனுமதிப் பத்திரத்தை ரத்து செய்து, அந்த இடத்திலிருந்து அதனை உடனடியாக அகற்ற வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் அவர்கள் நேரடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில்:

பொதுமக்கள் வழங்கிய தகவலின் பேரில், பொதுச் சுகாதார அதிகாரியுடன் (PHI) சென்று பார்த்தபோது, மனித பாகங்கள் மிகவும் அற்பமான முறையில் மேலோட்டமாகப் புதைக்கப்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டது.

சுகாதார விதிகளை மீறிச் செயற்பட்ட அந்த நிலையத்தை உடனடியாக சீல் வைத்து மூடுவதற்குப் பொதுச் சுகாதார அதிகாரிக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது.

புதிய நடைமுறை: உடல் பாகங்களை மன்னார் பொது மயானத்தில் மாத்திரமே புதைக்க வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தும், அவர்கள் அதனை மீறியுள்ளனர்.

நகரசபையின் புதிய நிலையம்: மன்னார் பொதுச் சேமக்காலைக்கு அருகாமையில் நவீன எம்பாமிங் நிலையம் ஒன்றின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.

இனிவரும் காலங்களில் அங்கு மாத்திரமே உடல்களைப் பதப்படுத்த அனுமதி வழங்கப்படும் என முதல்வர் உறுதி அளித்துள்ளார்.

 

Recommended For You

About the Author: admin