துராந்து எல்லைக்கோட்டில் உக்கிரம்

துராந்து எல்லைக்கோட்டில் உக்கிரம்: பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் பதில் தாக்குதல்!

ஆப்கானிஸ்தான் வான்பரப்பில் பாகிஸ்தான் அண்மையில் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஆப்கானிஸ்தான் படைகள் பாகிஸ்தான் இராணுவ நிலைகள் மீது பாரிய பதில் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் வான்படை ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடத்தியிருந்தது. இதற்குப் பதிலடியாகவே தற்போது பெப்ரவரி 26 மற்றும் 27 ஆகிய திகதிகளில் ஆப்கான் பாதுகாப்புப் படைகள் இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன.

துராந்து எல்லைக்கோட்டை (Durand Line) அண்டிய பகுதிகளில் அமைந்துள்ள பாகிஸ்தான் இராணுவத்தின் பல முக்கிய நிலைகள் மற்றும் காவல் நிலையங்களை (Police Stations) இலக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் தகவல்படி, சுமார் 15-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் இராணுவ முகாம்கள் ஆப்கான் படைகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மோதல்களில் பாகிஸ்தான் இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 40 முதல் 55 வரையான சிப்பாய்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், பாகிஸ்தான் தரப்பு பாரிய உயிரிழப்புகளை மறுத்து வருகின்றது.

எல்லையில் நிலவும் இந்தப்பதற்றமான சூழ்நிலையால், பாகிஸ்தானின் காவற்துறை (Police) மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் அதிஉச்ச தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் திடீர் இராணுவ நடவடிக்கை காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளதுடன், எல்லைக் கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin