பிரான்ஸில் மருத்துவச் சேவையில் ஒரு மாபெரும் தொழில்நுட்பப் புரட்சி நிகழப்போகிறது!

பிரான்ஸில் மருத்துவச் சேவையில் ஒரு மாபெரும் தொழில்நுட்பப் புரட்சி நிகழப்போகிறது!

மருத்துவர்களைச் சந்திப்பதற்கான நேரத்தை முன்பதிவு செய்ய உதவும் முன்னணி நிறுவனமான Doctolib, தற்போது மருத்துவத் துறைக்கெனப் பிரத்தியேகமாக ஒரு ‘செயற்கை நுண்ணறிவு’ (Artificial Intelligence) ஆய்வகத்தைத் தொடங்கியுள்ளது.

சுமார் 2 கோடி யூரோக்கள் (20 மில்லியன்) முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ள இந்த ஆய்வகம், பிரான்சின் பாரிஸ் மற்றும் நாந்த் (Nantes) நகரங்களிலும், ஜெர்மனியின் பெர்லின் நகரிலும் அமையவுள்ளது.

இந்தத் திட்டத்திற்காக மட்டும் 100 செயற்கை நுண்ணறிவு வல்லுநர்கள் உட்பட 900 ஆராய்ச்சியாளர்களை இந்நிறுவனம் பணியமர்த்தியுள்ளது.

இந்த மாபெரும் திட்டத்தை Doctolib நிறுவனம் தனித்துச் செயல்படுத்தவில்லை. நாந்த் நகர அரசு மருத்துவமனை, பிரான்சின் தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், குழந்தைகள் நல மருத்துவச் சங்கம் மற்றும் பல முன்னணி அறிவியல் ஆராய்ச்சி மையங்களுடன் கைகோர்த்துள்ளது.

இதனால் சாமானியர்களுக்கும் மருத்துவர்களுக்கும் என்ன லாபம்?

நோயாளிகளுக்குப் பாதுகாப்பான வழிகாட்டி: மருத்துவரைச் சந்திப்பதற்கு முன் உங்களைத் தயார்படுத்திக்கொள்ளவும், மருத்துவர் அளித்த பரிசோதனை முடிவுகள் மற்றும் சிகிச்சை முறைகளை எளிதாகப் புரிந்துகொள்ளவும் ஒரு ‘மெய்நிகர் மருத்துவ உதவியாளரை’ (Virtual Health Assistant) உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கம்.

மருத்துவர்களுக்குத் துல்லியமான உதவி: நோயாளிகளின் அறிகுறிகளை வைத்துத் துல்லியமாக நோயைக் கணிக்கவும், தகுந்த மருந்துகளைப் பரிந்துரைக்கவும் மருத்துவர்களுக்கு இந்தத் தொழில்நுட்பம் ஒரு சிறந்த உற்ற தோழனாகச் செயல்படும்.

வருமுன் காப்போம்: எதிர்காலத்தில் ஒருவருக்கு என்ன நோய் வரக்கூடும் என்பதை முன்கூட்டியே துல்லியமாகக் கணித்து எச்சரிக்கும் தொழில்நுட்பத்தையும் அவர்கள் உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இணையத்தில் தேடுவதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

பொதுவாக இணையத்தில் உள்ள சரிபார்க்கப்படாத அனைத்துத் தகவல்களையும் கொண்டு பதிலளிக்கும் மற்ற செயற்கை நுண்ணறிவுகளைப் போல இது செயல்படாது. மருத்துவர்களால் அங்கீகரிக்கப்பட்ட, உண்மையான மருத்துவத் தரவுகளைக் கொண்டு மட்டுமே இது பயிற்றுவிக்கப்படுகிறது.

அதனால், 100 சதவீதம் உறுதியான மற்றும் பாதுகாப்பான தகவல்களை மட்டுமே இது வழங்கும் என டாக்டோலிப் நிறுவனத்தின் தலைவர் உறுதியளித்துள்ளார்.

ஏற்கனவே 9 கோடி நோயாளிகளையும், 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களையும் தன்னகத்தே கொண்டுள்ள Doctolib,நிறுவனத்தின் இந்த முன்னெடுப்பு, ஒட்டுமொத்த ஐரோப்பிய மருத்துவத் துறையையே அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது!

Recommended For You

About the Author: admin