மன்னாரில் குடும்ப நல உத்தியோகத்தர்களின் கண்டனப் பேரணி
மன்னார் மாவட்டத்தில் அதிகரித்து வரும் நகைப் பறிப்புச் சம்பவங்கள் மற்றும் குடும்ப நல உத்தியோகத்தர் (FHO) மீதான தாக்குதல் ஆகியவற்றைக் கண்டித்து இன்று (பெப்ரவரி 21, 2026) பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த குடும்ப நல உத்தியோகத்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, கறுப்புப் பட்டி அணிந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
கடந்த பெப்ரவரி 14 ஆம் திகதி சனிக்கிழமை, கடமை நிமித்தம் சென்றுகொண்டிருந்த குடும்ப நல உத்தியோகத்தர் ஒருவரை வழிமறித்த மர்ம நபர்கள்
அவரிடமிருந்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியைப் பறித்ததோடு, அவருக்குக் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனா்.
கடமை நேரத்தில் அரசு உத்தியோகத்தர் ஒருவருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதை இந்தப் போராட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.
இன்று காலை 9:30 மணியளவில் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இருந்து ஆரம்பமான பேரணியினா் பஜார் பகுதி வழியாகச் சென்று , மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் அமைதியான முறையில் கண்டனத்தைத் தெரிவித்தனர்.
இறுதியாக மன்னார் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் (SSP) அலுவலகத்திற்குச் சென்ற உத்தியோகத்தர்கள், அங்குள்ள உயர் அதிகாரியிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளித்தனர்.
பெண்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தி 4 முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவையாவன
குடும்ப நல உத்தியோகத்தரைத் தாக்கிய மற்றும் நகைப் பறிப்பில் ஈடுபட்ட கும்பலை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.
பாதுகாப்பு அதிகரிப்பு: பெண்கள் தனியாகச் செல்லும் வீதிகள் மற்றும் பகுதிகளில் காவல்துறை ரோந்து மற்றும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.
மன்னார் நகரின் பல்வேறு பகுதிகளில் அண்மைக் காலமாக 4 நகைப் பறிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மோட்டார் சைக்கிளில் வரும் மர்ம நபர்களைக் கண்காணிக்கத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மக்கள், குறிப்பாகப் பெண்கள், வீதிகளில் அச்சமின்றி நடமாடுவதற்கான பாதுகாப்பான சூழலை காவல்துறை யினர் உறுதிப்படுத்த வேண்டும்.


