உடல் எடையைக் குறைக்கப் புதிய வழி : ‘மாவுச்சத்துச் சுழற்சி’ உணவு முறை பற்றித் தெரியுமா?
உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுத் துறையில் இப்போது ஒரு புதிய உணவு முறைப் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தசை பலத்தைக் குறைக்காமல், தேவையற்ற கொழுப்பை மட்டும் கரைக்க உதவும் அந்தப் புதிய முறைக்குத் தான் ‘மாவுச்சத்துச் சுழற்சி’ என்று பெயர். அதாவது, மாவுச்சத்து உட்கொள்ளும் அளவை நாளுக்கு நாள் சுழற்சி முறையில் மாற்றுவது!
என்ன இது மாவுச்சத்துச் சுழற்சி?
ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் உடற்பயிற்சி அல்லது உடல் உழைப்பின் தீவிரத்தைப் பொறுத்து, உணவில் உள்ள மாவுச்சத்தின் அளவைக் கூட்டவோ குறைக்கவோ செய்வதுதான் இதன் அடிப்படை. உடலுக்கு எப்போது ஆற்றல் தேவையோ, அப்போது மட்டும் மாவுச்சத்தைக் கொடுப்பதுதான் இதன் தந்திரம்.
எப்படிச் சாப்பிடுவது?
கடின உழைப்பு மற்றும் கடுமையான உடற்பயிற்சி செய்யும் நாட்களில், உடலுக்கு அதிக ஆற்றல் தேவை. எனவே அன்று முழு தானியங்கள், பருப்பு வகைகள், கோதுமை ரொட்டி, முழு தானிய அரிசி, பழங்கள் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்ற மாவுச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடலாம்.
அதிக உடல் உழைப்பு இல்லாத நாட்களில் மாவுச்சத்தைக் கடுமையாகக் குறைத்துக்கொள்ள வேண்டும். அப்போது உடல் தனக்குத் தேவையான ஆற்றலை, ஏற்கனவே சேமித்து வைத்துள்ள கொழுப்பைக் கரைத்துப் பெற்றுக்கொள்ளும். இந்த நாட்களில் பச்சைக் காய்கறிகள், கோழி இறைச்சி, மீன் மற்றும் முட்டை போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.
பொதுவாக மனித மூளைக்கும் தசைகளுக்கும் மாவுச்சத்து மிகவும் அவசியம். ஆனால், அது அளவுக்கு அதிகமானால் கொழுப்பாக மாறி உடலில் தங்கி உடல் எடையை ஏற்றிவிடும். இந்தச் சுழற்சி முறையைப் பின்பற்றுவதன் மூலம், உடலுக்குத் தேவையான ஆற்றலும் கிடைக்கும், அதே சமயம் அதிகப்படியான கொழுப்பும் கரையும்.
எவ்வளவுதான் சிறந்த உணவு முறையாக இருந்தாலும், இதைத் தொடங்கும் முன் மருத்துவ நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது கட்டாயம். இல்லையெனில், உடலில் தேவையற்ற ஊட்டச்சத்துக் குறைபாடுகள் அல்லது சத்துச் சமநிலையின்மை ஏற்பட வாய்ப்புள்ளது.

