காற்றாலை, கனிய மணல் அகழ்வு திட்டங்களுக்கு எதிராக மன்னாரில் 10-வது நாளாக தொடர் போராட்டம்..!

மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வு திட்டங்களை உடனடியாக நிறுத்தக் கோரி, மன்னார் மாவட்ட மக்கள், பொது அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து நடத்தி வரும் போராட்டம் செவ்வாய்க்கிழமை (12) 10-வது நாளாகத் தொடர்கிறது.

இப்போராட்டத்தில் மன்னார் தாழ்வுபாடு கிராம மக்கள் இன்றைய தினம் சுழற்சி முறையில் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

நேற்று (11) நள்ளிரவு, காற்றாலை திட்டங்களுக்கான பாரிய உபகரணங்களை, பொலிஸ் பாதுகாப்புடன் மன்னார் தீவுக்குள் கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், போராட்டக்காரர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, உபகரணங்களை ஏற்றி வந்த பார ஊர்தி உள்ளே நுழைய முடியாமல் தடைபட்டது.

இதன்போது, போராட்டக்காரர்களை அச்சுறுத்தி, புகைப்படம் எடுத்து அங்கிருந்து வெளியேற்ற பொலிஸார் முயற்சித்தபோதும், போராட்டக்காரர்களின் தொடர் எதிர்ப்பு காரணமாக, அந்த வாகனம் மன்னார் நீதிமன்ற வளாகம் முன்பாக நிறுத்தப்பட்டது.

இந்த போராட்டம் மற்றும் போராட்டக்காரர்களுக்கு எதிராக, மன்னார் பொலிஸார் தடை உத்தரவு பெறுவதற்காக இன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளனர்.

இந்த வழக்கில் போராட்டக்காரர்கள் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin