யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் Dr அர்ச்சுனா ராமநாதன் தம்மை இழிபடுத்தும் வகையில் பேசியதாகவும் அதற்கு சட்ட நடவடிகை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா வலய சைவ குருமார் சங்கத்தினால் இன்று மாலை (21) ஊடக சந்திப்பொன்று வாழைச்சேனையில் இடம்பெற்றது.
வடக்கு மாகாணத்தின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா இந்து சமயத்தையும் இந்து சமயத்தைப்பின்பற்றுபவர்களையும் இந்து சமய மக்கள் பூசுகின்ற திருநீற்றைப்பற்றியும் கேவலமான வார்த்தைகளை முகநூலில் பதிவிட்டமையைக் கண்டித்து அவருக்கெதிராக இந்து சமய கலாசார அமைச்சு மற்றும் நாட்டின் ஜனாதிபதி ஆகியோர்கள் சட்ட நடவடிக்கையெடுக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் நியாயம் வேண்டி தாங்கள் வீதியிலிறங்கிப் போராடப்போவதாகவும் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தனர்.
அவர் சைவ, இந்துக்குருமார்களைத் தாக்கக்கூடிய வார்த்தைகளை வெளியிட்டுள்ளார்.
ஆகவே, இப்புனிதமான திருநீற்றையும் அணிகின்ற சைவ மக்களையும் அந்தனர்களாக, சைவ சமய தீட்சை பெற்றவர்களாக, ஆலய தர்ம கர்த்தாவாக இருக்கலாம் இவர்கள் எல்லாம் எங்களது சமயத்திலே சமய தீட்சை பெற்றவர்களாகும்.
இவர்கள் அனைவரும் ஒவ்வொரு அங்கங்களுக்கும் திருநீறைப்பூசுகின்ற வழக்கம் இருக்கின்றது. இதிலும் குறிப்பாக, அங்கு ஒருவன் இருப்பான் என்று சுட்டிக் காட்டி அவர் பேசுகின்ற வார்த்தை எங்களுடைய குருமார்களைத்தாக்கிப்பேசுகின்றார் என்பதை நாங்கள் உணர்ந்து கொண்டுள்ளோம்.
ஆகவே, இவ்வாறான கேலித்தனமான பூச்சாண்டித்தனமான வார்த்தைகளைப் பேசுபவருக்கெதிராக இலங்கைச்சட்டத்தின்படி சரியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அத்துடன், பகிரங்கமாக எம்மிடம் மன்னிப்புக்கோர வேண்டும். இது போன்ற கேவலமான வார்த்தைகளைப் பேசுகின்ற இவரை ஒரு பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்த மக்கள் வெட்கப்பட வேண்டும். கவலைப்பட வேண்டும்.
ஆகவே, அவர் இன்றோடு இதை உணர்ந்து இவ்வாறான வார்த்தைகளைப் பேசுவதை நிறுத்த வேண்டும். இதே போன்று இஸ்லாம், பௌத்தம், கிறிஸ்தவம் என எந்த மதங்களையும் பற்றி எவரும் இழிவாகப் பேசுவதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம்.
இது சம்பந்தமான சட்டநடவடிக்கையெடுக்கப்பட வேண்டும். ஜனாதிபதியோ, இந்து கலாசார அமைச்சோ அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்காவிடின் கிழக்கு மாகாணத்திலே இருக்கின்ற இந்து குருமார், சைவ அமைப்புக்கள், பொதுமக்கள் ஒன்றிணைந்து இதற்கான தீர்வு வரும் வரையும் போராட்டத்தைத் தொடர்வோம் என்பதை சகலருக்கும் அறியத் தருவதாக தங்களது ஊடக அறிக்கையில் தெரிவித்தனர்