பிரித்தானியாவில் தமிழரின் கடையை உடைத்து ஏ.டி.எம். கொள்ளை!

பிரித்தானியாவில் தமிழரின் கடையை உடைத்து ஏ.டி.எம். கொள்ளை! பல வருட உழைப்பில் உருவான கடை பெரும் சேதம் – மூவர் தப்பியோட்டம்!

பிரித்தானியாவின் பெட்ஃபோர்ட்ஷையர் மாவட்டம், டொடிங்டன் பகுதியில் தமிழர் ஒருவருக்குச் சொந்தமான கடையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹை ஸ்ட்ரீட்டில் அமைந்துள்ள சதீஸ் என்பவருக்குச் சொந்தமான கடையை, கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் மஞ்சள் நிற அகழ்வு இயந்திரம் ஒன்றைக் கொண்டு மோதி உடைத்து, அங்கிருந்த ஏ.டி.எம். இயந்திரத்தைத் திருடிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக புதன்கிழமை அதிகாலை 4.50 மணியளவில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

மூவர் ஏ.டி.எம். இயந்திரத்தை வெள்ளை நிற வேனில் ஏற்றிச் சென்றதாகவும், பின்னர் M1 அதிவேக நெடுஞ்சாலையின் 12ஆவது சந்தியின் வடக்கு நோக்கிய இணைப்பு வீதியில் வேனையும் ஏ.டி.எம். இயந்திரத்தையும் கைவிட்டுவிட்டு BMW காரில் தப்பிச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தம்மைத் தொடர்புகொள்ளுமாறு பெட்ஃபோர்ட்ஷையர் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் ஒரு சாதாரண கொள்ளைச் சம்பவம் மட்டுமல்ல; அதன் பின்னால் ஒரு புலம்பெயர் தமிழரின் பல வருட உழைப்பும் கனவும் சிதைக்கப்பட்டுள்ளன.

புலம்பெயர் தேசங்களில் ஒரு சிறு தொழிலை ஆரம்பிப்பது அவ்வளவு எளிதானதல்ல.

விசா பிரச்சினைகள், வேலை தேடும் போராட்டம், குடும்பப் பொறுப்புகள் எனப் பல சவால்களைக் கடந்து, வங்கிக் கடன்கள் மற்றும் பலரது உதவிகளுடன் முதலீட்டைத் திரட்டி ஒரு கடையை உருவாக்குகின்றனர்.

அந்தக் கடையை வளர்ப்பதற்காக இரவு பகலாக உழைக்கின்றனர். தமது பிள்ளைகளைப் பராமரிப்பதுபோலவே கடையையும் கண்ணும் கருத்துமாகப் பாதுகாக்கின்றனர்.

ஆனால், கொள்ளையர்களின் சில நிமிட நடவடிக்கை பல வருட உழைப்பில் உருவான சொத்துகளையும் கனவுகளையும் சிதைத்துவிடுகிறது.

காப்புறுதி இருந்தாலும் அனைத்துச் சேதங்களையும் உடனடியாக ஈடுசெய்துவிட முடியாது.

Recommended For You

About the Author: admin