இனவாதத்தை கையில் எடுத்து உண்மை முகத்தை வெளிக்காட்டியுள்ளார் அநுரகுமார திஸநாயக்க என்று வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் சாடியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் தென்னிலங்கையில் முத்தரப்புப் போட்டியில் பெரும்பான்மை இல்லாமல் ஜனாதிபதி கதிரையை கைப்பற்றிய அநுரகுமார பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பெரும்பான்மையை கைப்பற்ற கடந்த கால ஆட்சியாளர்கள் போன்று இனவாதத்தை கையில் எடுத்து தங்களின் உண்மை முகத்தை வெளிக்காட்டத் தொடங்கியுள்ளனர்.
சமஷ்டி என்ற பேச்சுக்கு இடமில்லை என்ற வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தின் நிலைப்பாடு ஒற்றையாட்சியை தாண்டி அதிகாரப் பகிர்வினை புதிய அரசியல் அமைப்பின் மூலம் வழங்கத் தயார் இல்லை என்றால் தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசியல் யாப்பு என்ற உரையாடல் ஏமாற்று நாடகம்.
அதிகாரப் பகிர்வுக்கு இடமில்லை என ரில்வின் சில்வா கூறியதும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் சில விடயங்களை மாற்றுவது பற்றி பேசுவதும் ஐ. நா. மனிதவுரிமைப் பேரவையின் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பதும், யுத்தக் குற்ற ஆதாரங்களை சேகரிப்பதை ஏற்றுக் கொள்ளாமையும், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவ முகாம்களை எடுக்க முடியாது என கூறுவதும் மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண இந்தியாவை நோக்கி கை காட்டுவதும் கடந்த கால ஆட்சியாளரின் இனவாத செயற்பாடுகளின் தொடர்ச்சியாகவே ஜனாதிபதி அநுரகுமாரவின் நிலைப்பாடு வெளிப்பட ஆரம்பித்துள்ளது.
எனவே, தென்னிலங்கை மாற்றம் என்பது வடக்கு – கிழக்கு மாகாண தமிழர்களுக்கு ஏமாற்றமாகவும் வெறுமனே ஆட்சிமாற்றம் அல்ல ஆள் மாற்றமாகவே மாறியுள்ளது.
இலங்கைத் தீவுக்குள் எரிந்து கொண்டிருக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல் மாற்றம் என்ற கோசத்தில் நாட்டை ஒரு போதும் முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது- என்றார்.