பாராளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் அ.இ.ம. காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் எல்லோரும் ஒன்றுபட்டு உழைத்தால், அம்பாறை மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை பெற முடியும் என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக விழா அட்டாளைச்சேனை கலாசார மண்டபத்தில் (24) நடைபெற்றது, இவ் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற் கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கு துரோகம் செய்த எவரும் அரசியலில் நிலைக்கப்போவதில்லை, இம்முறை பொதுத் தேர்தல் முடிவுகள் இதனை உண்மைப்படுத்தும்.
அம்பாறை மாவட்டத்தில் இன ஒற்றுமை அவசியம் பேணப்படல் வேண்டும், விசேடமாக தமிழ் மக்களுடன் நல்லுறவைக் கட்டியெழுப்புங்கள்.
மூவினத்தவரையும் அரவணைத்துச் செல்லும் கட்சியே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ். இங்குதான் அரசியல் ஆளுமைகள் வளர்க்கப்படுகின்றன. மக்களின் அமானிதமே எங்களுக்கு முக்கியம்.
இம்முறை போட்டியிடும் சகல வேட்பாளர்களிடமும் உறுதியான சத்தியக்கடதாசி வாங்கியுள்ளோம். சமூகத்துக்கு துரோகமிழைப்போர், அரசியலில் நிலைத்ததாக வரலாறே இல்லை என்றார்.