இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது.
இதில், டெஸ்ட் தொடரை கைப்பற்றுவது மிகவும் முக்கியம். இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றினால் மட்டும்தான், டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இங்கிலாந்து அணியால் 7ஆவது இடத்தில் இருந்து, முதலிடத்திற்கு செல்ல முடியும்.
இதனால், எப்படியாவது டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியாக வேண்டும் என்ற முனைப்பில், பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி செயல்படும். ஆகையால், இந்த டெஸ்ட் தொடரில் கடும் போட்டி இருக்கும் என்க கருதப்படுகிறது.
முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 25 முதல் 29ஆம் தேதி வரை ஹைதராபாத்தில் துவங்கவுள்ளது. அடுத்த மூன்று போட்டிகள் பிப்ரவரி 2-6, பிப்ரவரி 15-19, பிப்ரவரி 23-27 ஆகிய தேதிகளில் விசாகப்பட்டினம், ராஜ்கோட், ராஞ்சி ஆகிய நகரங்களில் நடைபெறும். கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7 முதல் 11ஆம் தேதிவரை தர்மசாலாவில் நடைபெறும். அனைத்து போட்டிகளுல், காலை 9:30 மணிக்கு துவங்கி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி விவரம்
இந்திய அணி (முதல் 2 போட்டிக்கு): ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், யாஷஸ்வி ஜெய்ஷ்வால், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல், கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), துரூவ் ஜோரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பரீத் பும்ரா (துணைக் கேப்டன்), ஆவேஷ் கான்.
கே.எல்.ராகுல் இந்திய அணியில் சேர்க்கப்பட்டாலும், ஸ்பின்னர்களுக்கு சாதகமான பிட்ச்களில் கே.எல்.ராகுல் சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்வது கிடையாது, இதனால், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில், கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட மாட்டார். மாற்றாக கே.எஸ்.பரத் தான் விக்கெட் கீப்பராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், முதல் இரண்டு போட்டிகளிலும் கே.எல்.ராகுல் விளையாடுவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.
விக்கெட் கீப்பர் பேட்டர் ஶ்ரீகர் பரத், சமீப காலமாகவே பார்ம் அவுட்டில் இருக்கிறார். இந்திய ஏ அணிக்காக விளையாடிய போதும் கூட, சிறப்பாக செயல்படவில்லை. மேலும், சமீபத்தில் இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கு எதிரான நான்கு நாள் டெஸ்ட் போட்டியிலும், கே.எஸ்.பரத் 13 பந்துகளில் 15 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதனால், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கே.எஸ்.பரத் படுமோசமாக சொதப்ப வாய்ப்புள்ளது. இது இந்திய அணிக்கு பின்னடைவான விஷயமாகவும் மாறலாம்.
சமீபத்தில் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இருந்து இஷான் கிஷன் தாமாக விலகி, ஊர் சுற்றியதால், ஆத்திரமடைந்த பிசிசிஐ, இஷான் கிஷனை புறக்கணித்திருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.