ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு அதிகரிப்பால் நம்முடைய தனிப்பட்ட தகவல்களை ஆப்ஸ்கள் சேகரிப்பதும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
அவ்வப்போது இதுகுறித்த தகவல்களை அந்தந்த நாட்டின் அரசுகள் வெளியிட்டு மக்களை எச்சரிக்கை செய்து வருகின்றன. சில நாடுகளில் முக்கிய ஆப்ஸ்கள் இதன் காரணமாக தடை செய்யப்படுவதும் வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் பொதுமக்களின் தனிப்பட்ட தரவுகளை அதிகம் சேகரிக்கும் ஆப்ஸ்கள் குறித்த ஆய்வு அண்மையில் நடத்தப்பட்டது.
சர்ப்ஷார்க் என்ற தனியார் செக்யூரிட்டி நிறுவனம் 100 முன்னணி ஆப்ஸ்களை இதற்காக ஆய்வு செய்துள்ளது. ஆப்பிள் வரையரைத்துள்ள தனியுரிமை கொள்கை உட்பட 32 அளவுகோல்களை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வினை சர்ப்ஷார்க் நடத்தி இருக்கிறது.
இதில் மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆப்கள் பயனாளர்கள் தகவல்களை சேகரிப்பதில், முன்னணியில் உள்ளது தெரிய வந்துள்ளது.
இதில் பயனர்களின் பிரவுசிங் ஹிஸ்டரி, கட்டண பயன்பாடு, முகவரி, பெயர், மொபைல் எண் போன்ற தகவல்களை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் இரண்டும் அதிகம் சேகரிக்கின்றன.
இந்த ஆய்வில் எக்ஸ் (X) நிறுவனம் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை குறைவாக சேகரிப்பது தெரிய வந்துள்ளது. என்றாலும் தகவல்களை 3-வது தரப்பினருடன் பகிர்ந்து கொள்ள எக்ஸ் அதிக ஆர்வம் காட்டுவதும் கண்டறியப்பட்டுள்ளது