உள்ளூராட்சி தேர்தலை நடத்த முடியாத அரசாங்கம்: பொதுத் தேர்தல் குறித்து தம்பட்டம் அடிக்கிறது

நாட்டை அழித்த வங்குரோத்தடையச் செய்த திருடர்களை பிடித்து அவர்கள் திருடிய வளங்களை இந்நாட்டின் கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்றவற்றிற்கு ஒதுக்குவதே ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான நோக்கமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 68 ஆவது கட்டமாக, அனுராதபுரம் ஸ்ரீ துடுகெமுணு மகா வித்தியாலயத்திற்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

‘‘மோசடி கும்பலொன்று ஆளும் தரப்பு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சேர்ந்து மனித இம்யூனோகுளோபுலின் உள்ளிட்ட ஏராளமான மருந்துகளில் மோசடி செய்துள்ளனர். மனித இம்யூனோகுளோபுலின் என்ற மருந்துடன் நீர் கலக்கப்பட்டுள்ளது.

ஆளும் தரப்பு அமைச்சர்கள் ஜனாதிபதியின் பாதுகாப்பில் திருடும்போது கூட ஜனாதிபதி இந்த அமைச்சர்களை வெளியேற்றாது அவர்களை பாதுகாத்து வருகிறார். மருந்துப்பொருள் மோசடி செய்த சுகாதார அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்த போது ஜனாதிபதி, மொட்டுக் கட்சியின் 113 பேரை பயன்படுத்தி சுகாதார அமைச்சரைப் பாதுகாத்தாலும்,

சமீபத்தில், வியட்நாமில் கூடிய விலையில் கோவிட் பரிசோதனை உபகரண தொகுதிகளை கொள்வனவு செய்யும் விடயத்தில் நிதி முறைகேடு காரணமாக 22 இலட்சம் அமெரிக்க டொலர் திருடிய குற்றத்துக்காக வியட்நாம் சுகாதார அமைச்சருக்கு 18 வருடங்களும், அமைச்சருடன் இணைந்து திருட்டில் ஈடுபட்ட தொழிலதிபருக்கு 29 வருடங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

வியட்நாமில் இவ்வாறு நடக்கும் போது, இந்நாட்டில் ஊழல் மோசடியில் ஈடுபட்ட சுகாதார அமைச்சரை பாதுகாக்க ஜனாதிபதி முதல் ராஜபக்ச,மொட்டுக் குழுவின் கையாட்கள் சகலரும் கை தூக்கி உதவினார்கள்.

வியட்நாம் இலங்கையைப் போல் வங்குரோத்தல்லாத வேகமாக அபிவிருத்தி கண்டு வரும் நாடு. இந்த அபிவிருத்தியடைந்து வரும் நாட்டிலும் திருட்டுக்கு தண்டனை வழங்கப்படும் போது, வங்குரோத்தான நாட்டில், மக்கள் மீது பெரும் வரிச்சுமை சுமத்தப்பட்டு திருட்டு மற்றும் கடத்தல்கள் பெரிய அளவில் நடத்தப்பட்டு வருகின்றன.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு கூட முதுகெலும்பில்லாத இந்த அரசாங்கம் பொதுத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் என்று தம்பட்டம் அடித்து வருகிறது. ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தியும் மக்களும் தயாராகவே உள்ளனர். ‘‘ எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: admin