மகாவலி அபிவிருத்தி அதிகார சபையை இரத்து செய்வதற்கான முயற்சி எடுக்கப்பட்டுவருகின்றது. 13 பிளஸ் என்பதை வேறுகோணத்தில் செயற்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிமரசிங்க முயற்சிக்கின்றார் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்துக்குச் சென்று கூறிய விடயம் என்ன? மாகாணசபைக்குரிய அதிகாரங்களை முழுமையாக செயற்படுத்திக்கொள்ளுங்கள், நான் இடையூறு விளைவிக்கமாட்டேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது அரசியலமைப்பின் மறுசீரமைப்பை செய்யுமாறு என்னிடம் கேட்க வேண்டாம், நீங்கள் முதலமைச்சர் நிதியத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள், என்னால் நியமிக்கப்படும் ஆளுநர் அதற்கு அனுமதி வழங்குவார்.
அதேபோல பொலிஸ் கொள்கை, காணிக்கொள்கை என்பவற்றையும் செயற்படுத்திக்கொள்ளுங்கள் என்பதே அவரின் உரையின் சாராம்சம்.
விக்னேஸ்வரன் காலத்தில் முதலமைச்சர் நிதியம் உருவாக்கப்பட்டிருந்தாலும் அப்போது இருந்த ஆளுநர் அதற்கு அனுமதி வழங்கவில்லை. ஆளுநர் அனுமதி வழங்காததால்தான் அது மாகாணசபை சட்டமாகவில்லை.
ஆனால் இதற்கு தான் இடையூறு விளைவிக்கபோவதில்லை என்பதையே ஜனாதிபதி கூறியுள்ளார்.
அதேவேளை, மகா மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தையும் இரத்து செய்வதற்கு முற்படுகின்றார்.
வடக்கு, கிழக்கில் உள்ள காணிகளில் 40 வீதமானவை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபைக்கு உரித்தானது.
அந்த நிறுவனத்தை இரத்து செய்ய பின்னர், காணிகள் பிரதேச செயலாளருக்கு சென்றுவிடும், பிரதேச செயலாளரை வழிநடத்தும் அதிகாரமும் மாகாணசபைக்கு வழங்கப்பட்டுவிட்டால், 13 பிளஸ் எனக் கூறிக்கொண்டு இருக்கவேண்டியதில்லை. அதிகாரங்கள் சென்றுவிடும்.” என தெரிவித்தார்.