ஹூதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்ததில் இருந்து கொழும்பு துறைமுகம் உலகளாவிய கடல் போக்குவரத்து மையமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
துறைமுகத்தின் மூன்று முனையங்களிலும் அதிகளவான கப்பல்கள் தரித்துச் செல்லும் பாதைகளை கோரியுள்ளன. மேலும் இந்தியாவில் இருந்து பயணிக்கும் கப்பல்கள் இலங்கை வந்துச் செல்வது அதிகரித்துள்ளது என்று துறைமுக அதிகாரசபை சுட்டிக்காட்டுகிறது.
கொழும்பு துறைமுகத்தின் மூலோபாய அமைவிடம் காரணமாக துறைமுகத்தை கடக்கும் கப்பல்கள் மத்திய கிழக்கு, தெற்காசியா மற்றும் கிழக்கு ஆசியாவை இலகுவாக அணுக முடியும்.
தென்னாப்பிரிக்காவுக்குச் செல்லும் கப்பல்களுக்கு அகப்படும் முதல் துறைமுகமாக கொழும்பு துறைமுகம் திகழ்வதும் கப்பல்களின் வருகை அதிகரித்துள்ளமைக்கு ஒரு காரணமாக உள்ளது.
இலங்கைக்கு அடுத்தபடியாக சிங்கப்பூர் துறைமுகம் கப்பல் போக்குவரத்தின் மையாக உள்ளது. ஆனால், இலங்கைக்கு அப்பால் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளமையால் விரைவாக கப்பல்கள் வந்துச் செல்லக் கூடிய துறைமுகமாக கொழும்பு துறைமுகம் உள்ளதாகவும் துறைமுக அதிகாரசபை கூறியுள்ளது.
2023 ஆம் ஆண்டில் 20 அடி மற்றும் 40 அடி கொள்கலன் 6.9 மில்லியன் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, இந்த ஆண்டு இந்த தொகை அதிகரிக்கும் என அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மேலும் இஸ்ரேலில் இருந்து அரபு நாடுகளுக்கு செல்லும் கப்பல்களை அந்த நாடுகளை அனுமதிக்க மறுப்பதால், அந்த கப்பல்களும் கொழும்பு துறைமுகத்திற்கு வந்து மீள் ஏற்றும் பணிகளை மேற்கொள்கின்றன.
ஆனால், ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களால், இலங்கையில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
செங்கடல் ஊடாக பயணிக்க முடியாத காரணத்தினால் வேறு வழித்தடங்களில் பயணிப்பதற்கு அறவிடப்படும் கப்பல் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமையே இதற்கான காரணம் எனவும் துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.