லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள ரஜினிகாந்த்தின் 171 ஆவது படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக சமூக வலை தளங்களில் தகவல்கள் பரவியுள்ளன. இதனால் ரஜினி மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
மாநகரம், கைதி, மாஸ்டர்,விக்ரம் மற்றும் லியோ என 5 படங்களை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக மாறியுள்ளார்.
லியோ படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து ரஜினியின் 171 ஆவது படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இதற்கான கதையை உருவாக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் ஷூட்டிங் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விக்ரம் படத்தின் மூலமாக கமலுக்கு மிகப்பெரும் கம்பேக்கை லோகேஷ் கனகராஜ் கொடுத்திருந்தார். தற்போது ரஜினிகாந்த் ஜெயிலர் படம் மூலமாக உச்சம் தொட்டிருப்பதால் லோகேஷ் – ரஜினி படம் மிகப்பெரும் வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என்று இன்று தகவல்கள் பரவியுள்ளன.
ரஜினியை வைத்து லோகேஷ் இயக்கும் படத்தில் பல முக்கிய நட்சத்திரங்கள் இடம்பெறுவார்கள் என்று ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தன. இந்த சூழலில் சிவகார்த்திகேயன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
தற்போது ரஜினிகாந்த் ஞானவேல் இயக்கும் அவரது 170 ஆவது படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.