சமூக நீதி காவலர் .. யார் இந்த வி.பி.சிங்..

உத்தரபிரதேசத்தின் தையா சமஸ்தான மன்னர் ராம்கோபால் சிங்கின் இரண்டாவது மகனாக 1931, ஜூன் 25ஆம் தேதி பிறந்தவர்தான் வி. பி. சிங் என்கிற விஸ்வநாத் பிரதாப் சிங்.

அரசு குடும்பத்தில் பிறந்தவரானாலும் 20 வயதிலேயே சமூக நீதி பார்வை மேலோங்கிய வி.பி.சிங், 1950களில் தனது சொந்த நிலத்தை வினோபா பாவேவின் பூமிதான இயக்கத்திற்கு வழங்கியவர். அதன்பிறகு தீவிர அரசியலில் தடம் பதித்த வி.பி.சிங், உத்தர பிரதேச முதலமைச்சரானார்.

ராஜீவ் காந்தி உடனான கருத்து முரண்பாட்டால், மத்திய அமைச்சர் பதவியில் இருந்தும், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி ஜன் மோர்ச்சா என்ற கட்சியை தொடங்கினார்.

நேரு குடும்பத்தைச் சேர்ந்த அருண் நேரு, கேரளாவின் இன்றைய ஆளுநராக உள்ள ஆரிப் முகமது கான் ஆகியோருடன் இணைந்து, காங்கிரசுக்கு எதிராக ஜனமோர்ச்சா கட்சியை கட்டமைத்தார் வி.பி.சிங். அதன்பின்னர், திமுக, அசாம் கண பரிஷத், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளை ஒருங்கிணைத்து தேசிய முன்னணி என்ற வெற்றிக் கூட்டணியை உருவாக்கி, 1989ஆம் ஆண்டில் மத்தியில் ஆட்சியையும் கைப்பற்றினார்.

இந்தியாவின் 8வது பிரதமராக அவர் 11 மாதங்கள்தான் பதவி வகித்தார் எனினும் அந்த காலக்கட்டத்தில் அவர் செய்த சாதனைகள் பிரமிப்பானவை.  பல ஆண்டுகளாக நீடித்து வந்த காவிரி நதி நீர் விவகாரத்திற்கு தீர்வாக, வி.பி.சிங் ஆட்சிக்காலத்தில்தான் 1990ல் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.

இந்த மன்றம்தான், எந்தெந்த மாநிலங்கள் காவிரி நீரை எவ்வளவு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தீர்ப்பளித்தது. அதேபோல், தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் அனைத்து மத்திய ஆயுதக் காவல் படை தேர்வுகளும் நடைபெறும் என அறிவித்த வி.பி.சிங், சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு காமராஜர் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்துக்கு அண்ணா பெயரையும் சூட்டி அழகூட்டினார்

சமூக நீதி பார்வை கொண்ட வி.பி.சிங், பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பொதுத்துறை மற்றும் மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தி உயிரூட்ட நினைத்தார்… இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 51% வாழ்வதாகவும், அவர்களுக்கு 27சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் 1980களில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தது மண்டல் கமிஷன்.

இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசுகள் அந்த பரிந்துரையை நிறைவேற்றாத நிலையில், அதை நடைமுறைப்படுத்தினார் அப்போதைய பிரதமர் வி.பி.சிங்… ஆனால், உயர் சாதியினருக்கு இந்த இட ஒதுக்கீட்டில் எந்த பலனும் இல்லை எனக் கூறி வடமாநிலங்களில் பல இடங்களில் வெடித்தன போராட்டங்கள். மறுபுறம், மண்டல் கமிஷன் இட ஒதுக்கீடு திட்டத்தை ரத்து செய்யாவிட்டால், ஆட்சிக்கான ஆதரவை விலக்கிக் கொள்ள நேரிடும் என மிரட்டியது பாரதிய ஜனதா கட்சி.

இதற்கு நடுவே, அயோத்தியில் ராமர் கோயில் கட்ட இடத்தை ஒப்படைக்கக் கோரி ரத யாத்திரையை தொடங்கிய அத்வானியை பீகாரில் லாலு பிரசாத் யாதவ் கைது செய்தபோது நாடெங்கும் கலவரம் வெடித்தது. ஒரு புறம் மண்டல் கமிஷன் பரிந்துரைகளுக்கு எதிரான போராட்டங்கள், மறுபுறம் அத்வானி கைதுக்கு எதிரான கலவரங்களால் வட இந்தியாவே போர்க்களமாக மாறிப் போயிருந்தது.

இவற்றையெல்லாம் புறந்தள்ளி, மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த நடவடிக்கை எடுத்தார் விபி சிங். அவரது ஆட்சிக்கு அளித்த ஆதரவை பாஜக திரும்பப் பெற்றது… ஆட்சியை இழந்தார். நீதிமன்றங்களிலும் மண்டல் பரிந்துரைக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. இருப்பினும் மண்டல் கமிஷன் திட்டம் செல்லும் என 1992-ல் தீர்ப்பளிக்கப்பட்டது.

அப்போது மத்திய அரசு வேலைகளை சுரண்டி வந்தவர்களுக்கு இது சவுக்கடி என்று முழங்கினார் வி.பி.சிங்… அவரை மண்டல் கமிஷன் நாயகன் என்றும், சமூகநீதி காவலர் என்றும் புகழ்ந்தார் அப்போதைய திமுக தலைவரும், நெருங்கிய நண்பருமான கருணாநிதி…விபி சிங் மறைந்தாலும், அவரது சமூகநீதிச் சிந்தனைகள் என்றும் வாழும்.

Recommended For You

About the Author: admin